திருப்பத்தூர்:தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்டமாக, ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் மக்களவையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டர்.
அப்போது பேசிய அவர், “ஆம்பூரில் உள்ள இஸ்லாமியர்கள் கட்சியை வளர்ப்பதில் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அந்த நாகரீகத்தின் உச்சம் தான் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஒரு நாகரீக உடன்பாடு இங்கு உண்டு. ஒரு முறை இந்து சமூகத்தினர் நகராட்சித் தலைவராக வந்தால், அடுத்த முறை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நகராட்சித் தலைவராக வரவேண்டும், இப்படி ஒரு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் இந்தியாவிலேயே எங்கும் கிடையாது.
இங்கு ஒருவருக்கு ஒருவர் ஒன்றாக இருப்பார்கள், இப்படித்தான் இந்தியாவும் இருந்தது. வாஜ்பாய் அரசு இஸ்லாமியர்களை வதைத்தது கிடையாது, அவர் பி.ஜே.பி ஆக இருந்தாலும், உருதில் கவிதை பாடுவார். இந்த நாட்டிலே பிறந்து, வளர்ந்து, இந்த மண்ணுக்கு அடியில் போகிறவன் யாராக இருந்தாலும் அவன் இந்தியக் குடிமகன், மதத்தால் மாறுபட்டு இருக்கலாம். ஆனால் நாட்டால் இந்தியர்கள், மொழியால், தமிழர்கள். எனவே தொழுகின்ற தெய்வங்கள் மாறுபட்டு இருக்கலாம், அப்படி இருக்கும் போது எல்லோரும் சகோதரர்களாக கருத வேண்டும்.