ஈரோடு:தமிழ்நாடு -கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடியில், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மக்களவைத் தொகுதி விஐபி தொகுதியாக பார்க்கப்படுவதால், கர்நாடகத்தில் இருந்து வாக்காளர்களுக்கு ஏதும் பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
மாநிலத்தில் நாளை மறுநாள் (ஏப்.19) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலின்போது மக்கள் அச்சமின்றி வாக்கு செலுத்துவதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள இரு மாநில எல்லைப் பகுதியான காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் இன்று தீவிர வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது.
வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக கர்நாடகத்தில் இருந்து பணம் கொண்டு வரப்படாலம் என்பதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் கணக்கில் வராத ரூ.35 லட்சம் பணம் ரொக்கமாக பேருந்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, பணம் கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்தும் விதமாக இரு மாநில எல்லைப் பகுதியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.