தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீவனம் இன்றி நாட்டு மாடுகள் தொடர் உயிரிழப்பு.. அரசுக்கு வலுக்கும் வறட்சி கோரிக்கை! - cows die due to extreme drought - COWS DIE DUE TO EXTREME DROUGHT

Cows dying at Nilgiris villages: கோவையில் மழையளவு குறைந்ததால், மசினகுடியில் வறட்சி ஏற்படும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பிப்ரவரி மாதமே எச்சரிக்கை விடுத்தும், மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால் நாட்டு மாடுகள் உயிரிழந்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாட்டு மாடுகள் புகைப்படம்
நாட்டு மாடுகள் புகைப்படம் (Credits to ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 10:09 PM IST

நாட்டு மாடுகள் உயிரிழப்பு பற்றி விவசாயிகள் பேட்டி (Credits to ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்:தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வருகிறது. தமிழகத்தின் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் பதிவாகி வருவதால் கடுமையான வறட்சி நிலவுகிறது. அதன் ஒரு பகுதியாக மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் முதுமலை வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது.

குறிப்பாக மசினகுடி, மாவனல்லா, மாயார், பொக்காபுரம், சொக்கநல்லி, சிரியூர், வாழைத்தோட்டம், சிங்காரா, மாவநல்லா, செம்மநத்தம், தெப்பக்காடு, பூதநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் வறட்சியால் 3,000க்கும் அதிகமான நாட்டு மாடுகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், வனப்பகுதிகளுக்குள்ளும் உணவில்லாமல் நாட்டு மாடுகள் மற்றும் எருமைகள், எலும்பும், தோலுமாக படுத்தே கிடக்கின்றன. வறட்சியின் பிடியிலிருந்து மீள முடியாமல் கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன.

இதனால் கால்நடை உரிமையாளர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு 25 ஆயிரமாக இருந்த நாட்டு மாடுகளின் எண்ணிக்கை, தற்போது 3,000க்கும் குறைவாகவே இருக்கிறது. இது மட்டுமின்றி, மசினகுடியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் மாடுகளுக்கு உணவாக மாறியுள்ளது. தினசரி ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து மாடுகள் வரை உயிரிழப்பதாகவும், இதனால் பால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதாகவும், கால்நடை உரிமையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மேலும் மழையளவு குறைந்ததால், மசினகுடியில் வறட்சி ஏற்படும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பிப்ரவரி மாதமே எச்சரித்தும், மாவட்ட நிர்வாகம் மெத்தனப்போக்கோடு செயல்பட்டதே நாட்டு மாடுகளின் உயிரிழப்பிற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், கூடலூர் அதிமுக எம்எல்ஏ சார்பாகவும் தீவனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், 140 கால்நடை உரிமையாளர்களுக்கு உலர் தீவனம் மற்றும் பசுந்தீவனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாம் தமிழர் கட்சி சார்பில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கால்நடை உரிமையாளர்களுக்கு தாதுக்கள் அடங்கிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாயாரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் கூறுகையில், “நான் கால்நடை விவசாயம் செய்து வருகிறேன். வறட்சி காரணமாக தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புண்ணாக்கு, புல்லுக்கு எந்த சலுகையும் அரசு தருவதில்லை. சலுகை விலையில் கொடுத்தாலே போதும், இலவசமாக கொடுக்க வேண்டாம். மாயாரில் மட்டும் 200 நாட்டு மாடுகள் இறந்துள்ளன. இறந்த மாட்டுக்கு இழப்பீடு தர அரசு முன்வர வேண்டும்” என்றார்.

மேலும், மசினகுடியைச் சேர்ந்த தங்கவேல் கூறுகையில், “மசினகுடியில் மட்டும் 50 மாடுகள் இறந்துள்ளது. உணவு இல்லாமல், மாடுகள் மேய்ச்சலுக்கு போகும்போது சரிந்து விழுந்து இறக்கிறது. பட்டியிலேயே எழுந்து நிற்க முடியாமல் அப்படியே இறந்த மாடுகளைக் கொண்டு வந்து குவாரியில் போட்டிருந்தோம். அந்த மாடுகளை தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையினர் எரித்துள்ளனர், என்ன காரணம் எனத் தெரியவில்லை.

இதனால் இறந்த மாடுகளை காட்டி காப்பீடு பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இறந்த மாடுகளை வீட்டிலும் புதைக்க முடியாது, சுற்றிலும் வீடுகள் இருக்கிறது. இறந்த மாட்டை எடுத்துக் கொண்டு வந்து புதைப்பதற்கு 2,000 ரூபாய் ஆகும், அதற்கு கூட எங்களிடம் காசு இல்லை. அதனால் குவாரியில்தான் கொண்டு வந்து போடுகிறோம். அது கழுகு, காட்டுப் பன்றிகளுக்கு உணவாகிறது” என்றார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு மசினகுடியில் உள்ள நாட்டுமாடு இனத்தை பாதுகாக்க அதிகளவில் பசுந்தீவனங்களை ஒதுக்கீடு செய்து, கூடுதல் கால்நடை மருத்துவத் துறையினரை பணியமர்த்த வேண்டும் என்றும், அவற்றை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: "ஓட்டை வீடு ஒழுகுது.. அரசு வீடு கட்டித்தர வேண்டும்" - 6ஆம் வகுப்பு மாணவி கோரிக்கை! - 6th Std Student Request To TN Govt

ABOUT THE AUTHOR

...view details