மதுரை: ஈரான் நாட்டில் இருந்து கப்பல் மூலம் குஜராத் கடல் பகுதிக்கு கடத்தி வரப்பட்ட 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை, கடந்த சில நாட்களுக்கு முன்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றினர். இதில் 150 கிலோவிற்கு மேலாக மெத்தபெட்டமைன் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இந்த கும்பலுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் உடன் தொடர்புள்ளது என விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து, ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரை டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்த தேடியபோது, ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் தலைமறைவானது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, ஜாபர் சாதிக்கிற்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர்.
இதனிடையே, மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தமிம் அன்சாரி என்பவரது வீட்டிலும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னையைச் சேர்ந்த அருண் மற்றும் அன்பு ஆகியோர் போதைப்பொருளை வைத்து சென்றதாக கூறினார்.
அதன் அடிப்படையில், இருவரையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தேடி வருகின்றனர். இந்நிலையில், மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் ரயில் மூலம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, மத்திய வருவாய் பிரிவு புலனாய்வுத்துறை இயக்குனரக மதுரை யூனிட் அதிகாரிகள் ( DIRECTOR REVENUE INTELLGENGE ) நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்ட பிள்ளமன் பிரகாஷ் என்பவரை பின் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது, சென்னையில இருந்து செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில், இரண்டு பேக் உடன் சென்னையைச் சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் புறப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளும் பிரகாஷை ரயிலில் பின் தொடர்ந்தனர். மதுரை ரயில் நிலையத்தில் பிரகாஷ் இறங்க முற்பட்டபோது, அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்து, இரண்டு பேக்குகளையும் சோதனை செய்துள்ளனர். அதில், 50 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பொட்டலங்களில், 15 கிலோ பவுடர் மற்றும் 15 கிலோ திரவம் என 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, மத்திய வருவாய் பிரிவு புலனாய்வுத்துறை இயக்குனரக அதிகாரிகள், பிரகாஷை பிடித்து மதுரை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, பிரகாஷை காலை 5 மணி முதல் 12 மணி வரை என 7 மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அடுத்தகட்ட விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு பிரகாஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் என்பதும், கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி இவருடன் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், இதனை ரயிலில் மதுரை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், பணம் தருவதாக கூறியதன் அடிப்படையில் எடுத்து வந்துள்ளதாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளளது.
இந்நிலையில், பிரகாஷின் சென்னை கொடுங்கையூர் அபிராமி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, போதைப் பொருட்களை ஒரே இடத்தில் வைக்காமல், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பிரித்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரையில் அடுத்தடுத்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் மதுரையை மையமாக வைத்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தப்படுகிறதா என்ற அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:காமராஜர் பல்கலைக்கழகத்தை காப்பாற்ற இது ஒன்றுதான் வழி.. கல்வியாளர்கள் கூறுவது என்ன?