சென்னை:தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாள் சித்திரை திருநாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சித்திரை முதல் நாளான நாளை (ஏப்.14) சித்திரை திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், மறுமலர்ச்சி திராவிடர் கழக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து:சித்திரை திருநாள் வாழ்த்து தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வசந்த விழாவையும், இந்திர விழாவையும் வழங்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சித்திரை மாதம் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் மாதம் ஆகும். காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும்.
அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும் என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை முழுநிலவு நாளில் தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவர். சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு.
சித்திரைத் திருநாள் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாகும். சித்திரைத் திருநாள் என்றாலே மக்கள் பொது இடங்களில் கூடி மகிழ்வதும், கொண்டாடுவதும் தான். ஆனால், சமூகநீதிக்கு எதிரான சக்திகளாலும், சதிகளாலும் நமக்கான சமூகநீதி மட்டும் தள்ளிக்கொண்டே போகிறது. 2022 சித்திரை நாளுக்கு முன்பாகத்தான் நமக்கு சமூகநீதி கிடைப்பதற்கு தடையாக இருந்த அனைத்தும், நீதித்துறையின் சுத்தியலால் தகர்த்து எறியப்பட்டன.
உச்சநீதிமன்றமே பச்சைக்கொடி காட்டியும் உழைக்கும் மக்களுக்கான சமூகநீதி இன்னும் மலரவில்லை. நமக்கான சமூகநீதியை தாமதப்படுத்தலாமே தவிர தடுக்க முடியாது. சமுகநீதிக்கான சக்திகளை சித்திரை சுட்டெரிக்கும்; நமக்கான சமூகநீதி மிக விரைவில் மலர்ந்தே தீரும். அதற்கான உத்தரவாதத்தை நான் வழங்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வைகோ வாழ்த்து: இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளவேனில் காலம் விடைபெற்று, முதுவேனில் தொடங்குவதன் அடையாளம் தான் சித்திரை முதல் நாள் ஆகும். தமிழகத்திலும், அனைத்து இந்திய அளவிலும் ஒரு பெரிய மாற்றத்திற்கு கட்டியம் கூறுகின்ற வகையில் இந்த ஆண்டு சித்திரைத் திங்கள் மலர்கின்றது. மலரும் சித்திரையில், தளரும் பகை, வளரும் நகை என்று மகிழ்வோடு இந்நாளை நாம் கொண்டாடி மகிழ்வோம்.