தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஓட்டுநர் நடத்துநர்களுக்கு முக்கிய அறிவுரை! - safety of school students

Advice for Govt bus workers: பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு நிலையான இயக்க முறைமை வாயிலாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

advice to drivers and conductors for safe operation of buses
பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுரை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 2:31 PM IST

சென்னை: இது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், படியில் தொங்கியவாறு பயணம் செய்து விபத்து ஏற்படுவதை தவிர்த்திட, முதற்கட்டமாக கதவுகள் பொருத்தப்படாத பேருந்துகளுக்கு முன் பின் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகள் பொருத்துவதற்கு 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து, மீதமுள்ள கதவுகள் அற்ற பேருந்துகளுக்கு படிப்படியாக தானியங்கி கதவுகள் பொருத்திட நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்கள், பேருந்துப் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியைப் பிடித்து தொங்கிக் கொண்டு பயணம் செய்வதைத் தவிர்க்க, பேருந்தின் முன் மற்றும் பின் பக்கங்களில் உள்ள படிக்கட்டுகளின் அருகே உள்ள ஜன்னல்களுக்கு நிரந்தரமாக கண்ணாடி பொருத்தவும், உடனடி நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், அவ்வாறு கதவுகள் பொருத்தப்படாத பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு நிலையான இயக்க முறைமை - SOP வாயிலாக கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

  • பேருந்து நிறுத்தங்களில் இருந்து பேருந்தினை நகர்த்தும் முன்னர், ஓட்டுநர் பின்பார்வை கண்ணாடி மூலம் பயணிகள் யாராவது ஓடி வந்து ஏற முயற்சிக்கின்றனரா என்பதை கவனிக்க வேண்டும்.
  • அதேபோல் நடத்துநரும், பேருந்து இயக்க நிலையில் இருக்கும்போது படிக்கட்டில் ஏற முயல்பவர்களைக் கண்காணித்தும், விசில் அடித்து நிறுத்தி, அவர்களை ஏற்றி பேருந்தை இயக்க வேண்டும்.
  • ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தக்க அறிவுரை மற்றும் எச்சரிக்கை வழங்கி, பேருந்தின் உள்ளே வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அதைத் தொடர்ந்து, ஆபத்தான முறையில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால், பேருந்தை சாலை ஓரம் நிறுத்தி, மாணவர்கள் பேருந்தின் உள்ளே வந்த பிறகே பேருந்தை இயக்க வேண்டும்.
  • இதையடுத்து, தொடர்ந்து அறிவுரைகளைக் கேளாமல் படிக்கட்டில் பயணம் செய்பவர்கள் மீது அருகில் உள்ள போக்குவரத்துக் காவலரிடமோ அல்லது காவல் நிலையத்திலோ புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அதேபோன்று, பேருந்துகள் சாலை சந்திப்பு மற்றும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் மெதுவாகச் செல்லும்போது, இறங்க முயற்சிக்கும் பயணிகளை நடத்துநர் எச்சரிக்கை செய்ய வேண்டும்.
  • பேருந்து நிறுத்தம் வருவதை நடத்துநர் குரல் மூலம் முன் கூட்டியே தெரிவித்து, பயணிகளை சரியான நிறுத்தத்தில் இறங்க தயார்படுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:மாணவர்களுக்கான காலணி கணக்கெடுப்பு பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை..

ABOUT THE AUTHOR

...view details