தருமபுரி: அரூர் அடுத்த தீர்த்தமலை பகுதியில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோயில்(theerthamalai temple), மலையின் உச்சியில் அமைந்துள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள இத்திருக்கோயிலுக்குப் பக்தர்கள் படிக்கட்டுகள் மூலமாகவே நடந்துச் சென்று இறைவனைத் தரிசனம் செய்து வருகின்றனர்.
சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் செங்குத்தான படிக்கட்டுகளாகவும் மற்ற பகுதியில் சற்று உயரமாகவும், தாழ்வாகவும் நடைபாதை உள்ளது. இத்திருக்கோயிலில் ராமர் தீர்த்தம், குமார தீர்த்தம், அக்னி தீர்த்தம், கௌரி தீர்த்தம் உள்ளிட்ட ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. ராமர் தீர்த்தம் மலையின் உச்சியிலிருந்து வருகிறது.
தீர்த்தமலை (Credit - ETV Bharat Tamil Nadu) புனித தீர்த்தங்களில் நீராடினால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் தருமபுரி(Dharmapuri), கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதியிலிருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து இங்குள்ள தீர்த்தங்களில் புனித நீராடி தீர்த்தகிரீஸ்வரரை வழிபடுவது வழக்கம்.
தீர்த்தகிரீஸ்வரர் புனித தீர்த்தம் (Credit - ETV Bharat Tamil Nadu) வார நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் கூட்டம் இத்திருக்கோயில் நிரம்பி வழியும். இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க -நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட தனியார் பள்ளி.. வட்டார கல்வி அலுவலர் உட்பட 3 பேர் கைது!
தீர்த்தமலை மலை அடிவாரத்திலிருந்து மலையுச்சி பகுதிக்கு வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் கோயில் புனரமைப்பு பணிக்காகப் பக்தர்கள் அடிவாரத்தின் கீழிருந்து மேலே செல்லும் பொழுது செங்கற்களை அவர்களாகவே எடுத்துச் செல்கின்றனர். மேலும், கட்டுமானத்திற்குத் தேவையான சிமெண்ட் மணல் மற்றும் எம்சாண்ட் போன்ற பொருட்கள் கழுதைகள் மூலம் மேலே கொண்டு செல்லப்படுகிறது.
இந்த பணிக்காக பத்து கழுதைகள் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியிலிருந்து வரவழைக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு பத்து முதல் 15 முறை அடிவாரத்திலிருந்து கோயில் மலை உச்சிக்கு மணல் மற்றும் சிமெண்ட்களை கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. தீர்த்தமலை திருக்கோயிலில் புனரமைப்பு பணிகள் சுமார் 80 விழுக்காடு முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்தாண்டு தொடக்கத்திலோ நிறைவடையும் என கூறப்படுகிறது.
தீர்த்தகிரீஸ்வரர் கோயில் (Credit - ETV Bharat Tamil Nadu) புனரமைப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த பிறகு தீர்த்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரோன் தொழில்நுட்பங்கள் வரை வளர்ந்தாலும், பழங்காலத்தைப் போலவே மலைப்பாதையில் கழுதைகள் மூலம் கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லும் நிலை தற்போது வரை நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இந்த லிங்கைகிளிக் செய்யுங்கள்