தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், நேற்று (மே 27) ஆடை அணியும் போது தவறுதலாக ஊசியை (குண்டூசி பின்) விழுங்கியுள்ளார். அதனால், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அச்சிறுமியின் பெற்றோர், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு (ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர்) அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு, சிறுமியை பரிசோதனை செய்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அருண், உடையில் குத்தப்படும் குண்டூசி சிறுமியின் நுரையீரலில் சிக்கி இருப்பதைக் கண்டறிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த 4 சென்டி மீட்டர் அளவுள்ள ஊசியை, மருத்துவர் அருண் அவரது மருத்துவக் குழுவுடன் இணைந்து, ப்ரோன்கோஸ்கோபி (Bronchoscopy) என்னும் சிகிச்சையின் மூலம், எவ்வித பக்க விளைவுகளும் இல்லாமல் அகற்றியுள்ளனர்.