தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தட்டம்மை, சின்னம்மை நோய்களை கண்டு பயப்படத்தேவையில்லை -மருத்துவரின் அறிவுரை என்ன? - is chickenpox dangerous

Symptoms of chickenpox: கோடைக் காலம் தொடங்கிய நிலையில் அம்மை நோயின் அறிகுறிகள், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பது குறித்த தகவல்களை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் ரெமா சந்திரமோகன் ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டியாக அளித்துள்ளார்.

மருத்துவரின் அறிவுரை என்ன
மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 7:55 PM IST

தட்டம்மை, சின்னம்மை நோய்களை கண்டு பயப்படத்தேவையில்லை

சென்னை:கோடை வெயில் காலத்தில் வைரஸ் கிருமிகளால் வரக்கூடிய தட்டம்மை, சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற நோய்களைக் கண்டு பயப்படத்தேவையில்லை எனவும், அதே நேரத்தில் நோய்த் தொற்று எளிதாகப் பரவும் என்பதால் தனிமைப்படுத்துவதுடன், நீர்ச்சத்து அதிகரிக்கும் வகையில் நீராகாரங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் ரெமா சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டு வருகிறது. கோடைக் காலத்தில் வெயிலினால் ஏற்படும் வியர்வையின் காரணமாகவும், வைரஸ் தாக்கத்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தோல் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

இது போன்ற நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் ரெமா சந்திரமோகன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், “கோடைக்காலம் வந்துவிட்டால் வெயிலின் காரணமாக ஏற்படக்கூடிய வியர்கூறு, கட்டி போன்றவற்றில் இருந்தும், வைரஸ் மூலம் பரவும் நோய்களில் இருந்தும் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

2 முறை குளியல் அவசியம்: குழந்தைகள் தினமும் 2 முறை குளிப்பது நல்லது. இதனால் உடம்பிலிருந்து வியர்வை வரும் துவாரங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு, வியர்வை வெளியேறும். வியர்வை உடம்பில் இருந்து வெளியில் வருவதற்கான வழிகள் அடைக்கப்படும் போது, வியர்கூறு ஏற்படும். அதேபோல் வியர்வை வெளியேறாமல் இருக்கும் போது உடம்பில் கட்டியும் வரும், எனவே தினமும் 2 முறை குளிப்பது நல்லது.

அதேபோல் வாரத்திற்கு 3 நாட்கள் தலைக்குக் குளிக்க வேண்டும். கட்டியானது, ரோமம் அதிகம் உள்ள இடங்களில் தான் உருவாகும். எனவே வியர்வை வெளியேறும் வகையில் தலையையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி நீர் அருந்த வேண்டும். இளநீர், பழங்கள், பழச்சாறுகள், போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். பருத்தியிலான (Cotton) தளர்வான உடைகளையே அணியவேண்டும். இறுக்கமாக உடை அணிவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் பாலியஸ்டர், நைலான் போன்ற உடைகளைத் தவிர்க்க வேண்டும்.

அம்மையின் அறிகுறிகள் என்ன?:அம்மைநோய் ஒரு வகை வைரஸினால் பரவும் நோயாகும், இது எளிதில் பரவும். இந்நோய் பொதுவாகக் குழந்தைகளை எளிதில் தாக்கும். பொன்னுக்கு வீங்கி நோயின் அறிகுறிகளாகக் காது மடலுக்குக் கீழ் உள்ள உமிழ் நீர் சுரப்பியை வைரஸ் தொற்று தாக்குவதால், தாடையின் இருபுறமும் வீக்கம் தோன்றுகிறது. மேலும் காய்ச்சல், கழுத்துவலி, தலைவலி, பசியின்மை, பலவீனம், சாப்பிடும்போதோ அல்லது விழுங்கும்போதோ வலி ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

சின்னம்மையின் அறிகுறிகளாக உடலில் நீர்க் கட்டியைப்போன்ற சிறிய கொப்பளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி, நீர் கோர்த்துக் காணப்படும். கொப்பளங்களில் இருந்து நீர் வடியும். பின்னர் நீர் வறண்டு கொப்பளங்கள் உதிரும். இந்த நோய் குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், முதியவர்களுக்கும் எளிதில் பரவும்.

தனிமைப்படுத்துவது நோய் பரவலைத் தடுக்கும்:தட்டம்மைக்கு, மணல்வாரி அம்மை என்ற மற்றொரு பெயரும் உண்டு. காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், கண்ணில் நீர் வடிதல் அதன் அறிகுறிகளாகும். முகம் மற்றும் காதின் பின்பகுதிகளில் வேர்க்குரு போன்ற அறிகுறிகள் தோன்றி, சிவப்பு புள்ளிகளாக உடல் முழுவதும் பரவிக் காணப்படும். கண்கள் சிவந்து வீக்கமாகக் காணப்படும். இரண்டு வாரங்களில் இந்த அம்மையும் தானாகவே சரியாகிவிடும்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவரின் உமிழ் நீர், தும்மல் அல்லது இருமல் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், இந்நோய் எளிதில் பரவுகிறது. அம்மை ஒரு வைரஸ் தொற்று என்பதால், இரண்டு வாரங்களில் இந்நோய் தானாகவே சரியாகிவிடும். எனினும் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். நோய் பரவாமல் தடுக்க நோய் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவதின் (Isolation) மூலம் மற்றவர்களுக்குப் பரவுவதை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.

மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்:தட்டம்மை , பொன்னுக்கு வீங்கி மற்றும் சின்னம்மை இருந்தால், உடனே அருகிலுள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கோ, அல்லது அரசு மருத்துவமனைக்கோ தெரியப்படுத்தி, சிகிச்சையினை பெறலாம். நோயால் பாதிக்கப்பட்டவருக்குக் காய்ச்சல் இருக்கும் போது, அது அம்மை நோய் தானா என்பதை மருத்துவரை அணுகி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து வீட்டில் வைத்துத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவருக்குக் காய்ச்சல் அதிகமாக இருந்தாலும், நிமோனியா வந்தாலும், வலிப்பு வந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாயில் புண் இருப்பதால், அவர்களால் அதிகம் உணவு உட்கொள்ள முடியாது. எனவே இளநீர் அல்லது வீட்டில் உள்ள சோறு போன்றவற்றை நன்றாகக் கரைத்து நீராகாரமாகக் கொடுக்கலாம். மேலும் பழங்களையும் கொடுக்கலாம். குழந்தைகளைக் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையில் நேரடியாக வெயில் உடம்பில் படும் வகையில் விளையாட அனுமதிக்கக்கூடாது.

வெயிலில் தான் வைட்டமின் டி உள்ளது என்பதால், நிழலான பகுதியில் விளையாட அனுமதிக்கலாம். வெளியே வெயில் நேரத்தில் செல்லும்போது, நேரடியாகத் தலையில் வெயில் படதா வகையில் கர்சீப், தொப்பி போன்றவற்றை அணிந்து செல்வது நல்லது”, என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் என்னென்ன? ஆட்சியர் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details