குப்பைக்குள் கண்ணாடிகளை போடாதீர்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், கஸ்தூரி பாய் நகர் ரயில்வே நிறுத்தம், மியாவாக்கி பூங்கா, புனித மேரீஸ் கிறிஸ்துவக் கல்லறை போன்ற இடங்களில் இன்று (ஜன.20) தூய்மைப் பணியானது நடைபெற்றது.
குறிப்பாக, குப்பை மற்றும் மரம் செடிகள் தோட்டக்கழிவுகளை அகற்றும் பணியானது நடைபெற்றது. இந்த தூய்மைப் பணியின் போது, கஸ்தூரி பாய் ரயில் நிலையத்தின் வாகன நிறுத்தத்தில் அதிகளவு நெகிழி (Plastic) மற்றும் உடைந்த கண்ணாடி பொருட்கள் இருந்தன.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களின் நலத்தை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்தப் பணியில், பெருநகர சென்னை மாநகரட்சி ஆணையரும் ஈடுபட்டு தோட்டக்கழிவுகளை அப்புறப்படுத்தினார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "கோடிக்கணக்கான மக்கள் வாழும் இந்த சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மொத்தம் 19,000 பேர் இருக்கிறார்கள். குப்பைகளைத் தொடர்ந்து மக்கள் பிரித்தெடுக்காமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
மரம், செடி குப்பைகளை போட வேண்டிய இடத்தில், தொடர்ந்து உடைந்த கண்ணாடி மற்றும் பிளேடுகள் போன்றவை இருக்கிறது. தூய்மைப் பணியாளர்களின் நலத்தை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கஸ்தூரி பாய் ரயில் நிலையத்தில், அதிக அளவில் நெகிழி குப்பைகளை எடுத்துள்ளோம்.
இதன் அருகில்தான், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளது. இந்த நெகிழி எல்லாம் அங்கு சேர்ந்து விடுவதால், அங்கு அடைப்பு ஏற்படுகிறது. ஏன், மயனாத்தில் கூட குப்பைகளை மக்கள் போட்டுவிட்டு செல்கின்றனர். தொடர்ந்து மக்கள் குப்பைகளைப் பிரித்து தந்தால் விரைவில் சென்னை, 'தூய்மை சென்னை'-யாக மாறும். பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமான ஒன்று.
அதேபோல் சில ஒப்பந்ததாரர்கள், அரசோ அல்லது தனியார் கட்டுமானப் பணிகளாக இருக்கட்டும், இரவோட இரவாக காலியான இடங்களைத் தேடி அங்கு கட்டடக் கழிவுகளைக் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால், அனைவரின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும்" என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:தொடர்ந்து தமிழகத்தைப் புகழும் பிரதமர் மோடி.. தமிழகத்தில் வாக்கு வங்கி உயருமா?