சென்னை:மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை தா.வேலு தலைமையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
தமிழச்சி தங்கப்பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil nadu) இதில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தமிழச்சி தங்கப்பாண்டியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். பின்னர் செய்தியாளகளைச் சந்தித்துப் பேசிய அவர், “கல்வி ஒன்று தான் மக்களை உயர்த்துகின்ற ஆயுதம். பகுத்தறிவு தான் மக்களுக்கு சிறந்த பரிசு என்று உணர்த்தும் வகையில் இந்த விழா நடைபெற்றுள்ளது.
இந்த முறை செயின்ட் தாமஸ் மவுண்ட் - வேளச்சேரி இடையேயான ரயில்வே பாதை அமைககும் திட்டம் பாதியில் நிற்கிறது. அதனை நிறைவேற்றிடவும், மழைநீர் வடிகால் பணிகளுக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த முறை முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றிட முயற்சி செய்வேன்” என்றார்.
தென் சென்னை தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரை விட அதிக மக்கள் பணி செய்பவர் நான்தான் என தமிழிசை செளந்தரராஜன் கூறியது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “தென் சென்னை மக்கள் வாக்களித்து என்னை தேர்வு செய்துள்ளனர். எனவே, என்னைக் குறித்த அவரது கருத்து என்பது தென் சென்னை மக்களை கொச்சைப்படுத்துவதாகும். எனவே, தமிழிசைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
நீட் தேர்வு குளறுபடிகள்: நீட் தேர்வைப் போன்ற ஒரு மோசடியான தேர்வு இருக்க முடியாது. நடைபெற்று முடிந்துள்ள நீட் நுழைவுத் தேர்வில் பல குளறுபடிகள் நடந்துள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே மாணவர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரே தீர்வாக இருக்க முடியும் என்றார்.
மேலும், என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் 24 மணி நேரமும் திறந்திருக்கும். எனவே. மக்கள் எப்போது வேண்டுமானாலும் குறைகளை அலுவலகத்தில் அளிக்கலாம். இந்தியாவிலேயே 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஒரே கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி தான். அதனால்தான் பிரதமர் மோடி செங்கோலை தவிர்த்து, இந்திய அரசியலமைப்பை வணங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க:"கல்வி அமைப்பை சீர் செய்வதற்கு மார்க்சிய சிந்தனை தடையாக உள்ளது" - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு! - RN Ravi about Marxism