சென்னை:சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனையடுத்து, அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை சார்பில் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நிறைவுற்ற நிலையில், இன்று (செப்.26) உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளதை அடுத்து, சிறையில் இருந்து வெளியே வரவுள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், "குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் என்பது சட்டம் அளித்துள்ள உரிமையாகும். ஆனால், 15 மாதங்கள் தேவையில்லாமல், வழக்கில் எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் செந்தில் பாலாஜியை சிறையில் வைத்திருந்துள்ளார்கள்.
செந்தில் பாலாஜி வழக்கில் இருந்து விடுதலை பெற்றுவிட்டால் 15 மாதம் சிறையில் இருந்தது அவரின் உரிமையை மீறிய செயலாக கருதப்படும். குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளிகள் என நிரூபிக்கும் வரையில் குற்றவாளிகள் என கருதமுடியாது.