சென்னை: திமுக சட்டத்துறை சார்பில், மூன்றாவது மாநில மாநாடு வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் அதற்கான பணிகளை திமுக மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ ஆய்வு செய்தார்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த என்.ஆர். இளங்கோ, சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாட்டில் திராவிடமும் பொருளாதாரமும், திராவிடமும் தமிழ் தேசியமும் என்ற தலைப்பிலும், திராவிடமும் சமத்துவம், திராவிடத்தால் விளைந்த சமுதாய மாற்றம், திராவிடத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்யும் கருத்தரங்காக இந்த மாநாடு நடைபெறும்.
இன்றைய சூழலில் அரசியலமைப்பு சட்டம் மத்திய அரசால் மீறப்படுவது மிக முக்கியமான ஆழ்ந்த கருத்தாய் இந்த மாநாடு பார்க்கிறது. இந்த மாநாட்டின் நிறைவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை நிகழ்த்துவார்'' என்றார்.
இதையும் படிங்க:'அய்யாத்துரை நீ பல்லாண்டு'...பஞ்சாயத்து தலைவருக்கு பாராட்டு விழா நடத்திய ஊர் மக்கள்!
தொடர்ந்து தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி ஆட்சி நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்களே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த இளங்கோ, ''சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் நடைபெற்று வருகிறது என்றார். மேலும், போராட்டங்கள் நடைப்பெறும் இடங்களில் மாற்று கட்சியினர் கைது செய்யப்படுகிறார்களே? என்ற கேள்விக்கு, ''சட்டம் என்பது பொதுவானவை... சட்டம் எங்கெல்லாம் மீறப்படுகிறதோ, அங்கெல்லாம் வழக்குப்பதிவு செய்யப்படும்'' என தெரிவித்தார்.
தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தலை ஏன் திமுக எதிர்க்கிறது? என்பது தொடர்பாக பதில் அளித்தவர், '' மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள அந்தத் துறையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மாநில உரிமையில் தலையிடக்கூடாது'' என குறிப்பிட்டார்.