சென்னை:அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட மாடல் ஆட்சியின் மீது சில கண்டனத்தீர்மானங்களை நிறைவேற்றி அதன் மூலம் களங்கம் சுமத்திடலாம் என கற்பனைக் கோட்டை கட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
பொதுக்குழுவை கூட்டி விட்டோமே தீர்மானத்திற்கு என்ன செய்வது, எங்கே போவது, குறையின்றி நடந்துவரும் திமுக அரசு மீது எதைச் சொல்லி பழி போடுவது என தெரியாமல் இட்டுக்கட்டிய பொய்களை எழுதி நிரப்பி கண்டன தீர்மானம் என கதை கட்டியிருக்கிறார் ‘கட்டுக்கதை’ பழனிசாமி.
இந்திய வானிலை ஆய்வுமையத்தாலேயே கூட சரிவர கணிக்கமுடியாத பெஞ்சால் புயலால் எதிர்பார்க்காத அளவு, எதிர்பார்க்காத இடங்களில் அதி கன மழை பெய்த போதும் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் அவர்களால் உடனடியாக நிவாரணம் அறிவிக்கப்பட்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சாத்தான் குளம் தந்தை மகன் கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் என கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பசிபிக் கடலளவு பெருகிக் கிடந்த அலங்கோல ஆட்சி நடத்திய பழனிசாமி தற்போது குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி மக்களை காத்துவரும் திராவிடமாடல் ஆட்சி மீது சுண்டுவிரலை நீட்டிக்கூட பேச தகுதியில்லை.