சென்னை: நடப்பு ஆண்டிற்கான முதுநிலை நீட் தேர்வு கடந்த ஜூலை 7ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் என்று மாற்றம் செய்யப்பட்டு தேர்வுக்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இளநிலை நீட் தேர்வில் முறைகேடுகள், மோசடிகள் நடைபெற்றதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், வரும் 11ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான ஹால் டிக்கெட் வரும் 8ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான தேர்வு மைய ஒதுக்கீடு விவரம் கடந்த சில நாடகளுக்கு முன் வெளியிடப்பட்டது.
அதில், தமிழக மாணவர்களுக்கு ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை மதிமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளன.
இந்நிலையில், திமுக மாநிலங்களவை எம்.பி. வில்சன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து கோரிக்கை வைத்தது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "நீட் தேர்வு வரும் ஆக.11 ஆம் தேதி நடைபெறுகிறது. மாணவர்களின் தேர்வு மையமானது மாணவர்கள் வசிக்கும் இடங்களில் இருந்து 1000 கி.மீ தூரத்தில் போடப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.
ஆதலால், இந்த விகாரத்தில் உடனடியாக தலையிட்டு தேர்வு மையங்களை மாவட்டங்களுக்குள்ளயோ அல்லது மாநிலத்திலேயோ மறுஒதுக்கீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தேர்வர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்கலாம் எனக் கூறினேன். இந்த கோரிக்கையை அமைச்சர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்" என அந்த பதிவில் எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவ அலுவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலில், "முதுநிலை நீட் தேர்வு மையம் விவகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் எடுத்துரைத்தோம். முதலமைச்சர் அவர்கள் மாநிலங்களவை எம்பி வில்சனிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று கூறினார்.
அதன்படி, எம்பி வில்சன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையினை அமைச்சர் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி, முதுநிலை நீட் தேர்வு மைய விவகாரம் தொடர்பாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மாநிலங்களுக்குள்ளேயே மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்படுத்திக் கொடுத்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி.வில்சன், மருத்துவத்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு தமிழக மருத்துவ அலுவலர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:NEET PG தேர்வு மையத்திற்கு செல்வதற்கு மட்டுமே ரூ.12,500.. பி.வில்சனுக்கு முக்கிய கோரிக்கை! - NEET PG 2024 date mess