சென்னை:கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்டித் தரவேண்டும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து இருந்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது," கடந்த சில நாட்களாக, கோயம்புத்தூர் முழுவதும் நாங்கள் பிரச்சாரம் செய்தபோது, விளையாட்டுகளில் ஆழ்ந்த ஆர்வமுள்ள பல இளைஞர்களைச் சந்தித்தோம்.
தடகளம், துப்பாக்கிச் சுடுதல், கார் பந்தயம், கால்பந்து, ஸ்கேட்டிங், குதிரையேற்றம் போன்ற பல்வேறு விளையாட்டுகள் மற்றும் குறிப்பாக, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் கோயம்புத்தூர் மக்களின் ஆர்வம் ஈடு இணையற்றது.
மூன்று டிஎன்பிஎல் அணிகளின் உரிமையாளர்களின் தாயகமாகவும் கோவை உள்ளது. மேலும், வளர்ந்து வரும் தேசிய கிரிக்கெட் நட்சத்திரங்களில் பலர் மேற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களை மேலும் வலுப்படுத்தும் விதமாக, கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு உட்கட்டமைப்பில் ஒரு பெரிய ஊக்கம் தேவை.
இதனை நமது இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஒரு வருடமாக உருவாக்கி வருகின்றார். கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அற்புதமான திறமைகள் மற்றும் தமிழ்நாட்டில் மற்றொரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானத்தின் உண்மையான தேவையைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் ஒரு புத்தம் புதிய உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தை கோவையில் கட்டித் தரவேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், சென்னையைப் போல் கோவையில் உலகத்தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "கிரிக்கெட் மற்றும் விளையாட்டு ஆர்வலராக, எங்கள் 2024 தேர்தல் அறிக்கையில் மற்றுமொரு வாக்குறுதியைச் சேர்க்க விரும்புகிறேன். கோவையில், உலகத்தரத்திலான கிரிக்கெட் மைதானம், அங்கு உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் ஆதரவோடு அமைக்கப்படும்.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குறிப்பிட்டதைப் போல, சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தை அடுத்து, தமிழ்நாட்டின் இரண்டாவது பன்னாட்டு கிரிக்கெட் மைதானமாக இது விளங்கும். நமது திராவிட மாடல் அரசும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும் திறமையாளர்களை வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டின் விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:MI vs DC: மும்பை அணியில் மீண்டும் சூர்யகுமார் யாதவ்! முதல் வெற்றி பெறுமா?