தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திமுக பார்ட்டியில் ஜே.பி நட்டா" - ஜெயக்குமார் கூறும் மறைமுக கூட்டணி! - AIADMK JAYAKUMAR ON DMK

திமுக எம்பிக்கள் வைக்கும் பார்ட்டியில் ஜே.பி நட்டா கலந்து கொள்கிறார்; உதயநிதி பிரதமரை சந்திக்கிறார் என்றால் அந்த அளவுக்கு திமுகவும், பாஜகவும் மறைமுக இணக்கத்துடன் உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2024, 2:28 PM IST

சென்னை:சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளை, வார்டு, வட்ட கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்த "கள ஆய்வுக் குழு" உடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை. பாஜகவுடன் இப்போதும் கூட்டணி இல்லை என்பது அதிமுகவின் அழுத்தமான நிலைப்பாடு” என்றார்.

மேலும் பேசிய அவர், “நேற்றைய தினம் பொதுச் செயலாளரின் பேட்டியை திரித்து பாஜகவுடன் மறைமுகமான கூட்டணியில் அதிமுக இருப்பது போன்று தவறான கருத்துக்கள் பரவி வருகிறது. இதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கின்றோம். எம்ஜிஆர் மாளிகையிலிருந்துதான் பாஜகவுடன் இனி ஒரு போதும் கூட்டணி இல்லை என்ற முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. 2026ஆம் ஆண்டு தேர்தலிலும் இந்த நிலைப்பாடு தான் தொடரும்.

இதையும் படிங்க:பூனையைத் துரத்தி கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை! வனத்துறையிடம் இருந்து தப்பியதால் பரபரப்பு!

உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று என திமுகவை போல ஒரு மறைமுக கூட்டணியில் அதிமுக இருக்காது. திமுக எம்பிக்கள் வைக்கும் பார்ட்டியில் ஜே.பி நட்டா கலந்து கொள்கிறார். அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு ராஜ்நாத் சிங்கை அழைக்கிறார்கள்.

பிரதமர் மோடியாக வந்து தமிழகத்தில் எந்த அமைச்சரையும் பார்க்க தேவையில்லை அவர்களுக்கு ரகசிய சந்திப்பு நடந்து கொண்டுதான் உள்ளது. உதயநிதி பிரதமரை சந்திக்கிறார் என்றால் எந்த அளவுக்கு திமுகவும், பாஜகவும் மறைமுகமான இணக்கத்துடன் உள்ளது என நினைத்து பாருங்கள். பாஜகவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடனும் திமுக செயல்படுகிறது.

அதிமுகவின் நிலைபாட்டை திமுகவுக்கு தேவையான வகையில் ஊடகம் திசை திருப்புகிறது. இது உண்மை அல்ல. மக்கள் விரோத சக்தியான திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என்ற ஒத்தக் கருத்தோடு பாஜக தவிர்த்த கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பொதுச் செயலாளரும், கட்சியும் முடிவு செய்யும். இந்த நிலைப்பாட்டில் தான் நேற்றைய தினம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்,” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details