கோயம்புத்தூர்: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 83வது வார்டு காட்டூர், 70வது வார்டு தெப்பக்குளம் மைதானம் மற்றும் 68வது வார்டு சிவானந்தா காலனி ஆகிய மூன்று பகுதிகளில், இலவச குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, அப்பகுதி மக்களுக்கு 24 மணி நேரம் விநியோகம் செய்யப்படும் ஏ.டி.எம் குடிநீர் இயந்திரத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கக்கூடிய எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாட்டர் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும். தற்பொழுது வரை கோவை தெற்கு தொகுதியில் 9 குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஒவ்வொரு குடும்பமும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அவர்கள் எலக்ட்ரானிக் கார்டு மூலம் எடுத்துக் கொள்ளலாம்.
அதேபோல், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் அங்கன்வாடி மையங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நேற்று ஒரே நாளில் 3 அங்கன்வாடி மையங்கள் திறந்து வைத்து உள்ளோம். மேலும், 3 அங்கன்வாடி மையங்களின் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் மற்ற அரசியல் கட்சிகள் களத்திற்கு வரும் முன்பாக, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளை 195 இடங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே துவக்கி விட்டோம்.
தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் வேகம் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் தேர்தல் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, தேர்தல் பணிக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, முழு வீச்சில் தேர்தலைச் சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராகி வருகிறது.
நிச்சயமாக இந்த முறை தமிழகத்திலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் வெற்றிகளை குவிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இப்பொழுது இருக்கின்ற தேர்தலில், முக்கியமான கேள்வி என்பது யார் இந்த நாட்டினுடைய அடுத்த பிரதமர் என்பதுதான்.