தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“கலெக்டரை தூக்கினால்தான் தேர்தலில் ஜெயிக்க முடியும்”.. நெல்லை திமுக நிர்வாகி பேச்சால் பரபரப்பு!

DMK Committee Meeting: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நெல்லையில் நடந்த செயற்குழு கூட்டத்தில், திமுக நிர்வாகி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அதிகளவில் குடைச்சல் கொடுக்கிறார், அதனால் அவரை தூக்கினால்தான் தேர்தலில் ஜெயிக்க முடியும் என பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

DMK Committee Meeting
திமுகவின் செயற்குழு கூட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 6:59 AM IST

Updated : Feb 15, 2024, 12:43 PM IST

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நெல்லையில் செயற்குழு கூட்டம்

திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான தேதியை எதிர்பார்த்து அரசியல் கட்சிகள் அனைத்தும் காத்திருக்கிறது. இன்னும் 15 முதல் 20 நாட்களில் தேர்தல் தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக, பாஜக, அதிமுக உள்ளிட்ட அரசியல் அமைப்புகள் தேர்தல் தொடர்பான பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டம், கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில், பல்வேறு அணிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர், "கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும். அதற்காக நாம் உழைக்க வேண்டும். ஆனால், தற்போதைய ஆட்சியர் குடைச்சல் கொடுத்து வருகிறார். அரசுப் பணிகளைக் கண்காணிக்க 2 அதிகாரிகளை நியமித்துள்ளார். உள்ளாட்சி நிர்வாகத்திலும் தலையிடுகிறார். எனவே, தற்போதுள்ள கலெக்டரை மாற்ற வேண்டும், அவர் தொடர்ந்து நீடித்தால் 50 ஆயிரம் வாக்குகளை நாம் இழக்க நேரிடும்" என பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதாவது, உள்ளாட்சி நிர்வாகங்களில் உள்ள திமுக பிரதிநிதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்ந்து மோதல்போக்கு ஏற்படுவதே இது போன்ற நிலைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், ஆளும் கட்சியினரே மாவட்ட ஆட்சியர் நீடித்தால், கட்சிக்கு 50 ஆயிரம் வாக்குகள் குறையும் என பேசிய சம்பவம் செயற்குழு கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், "இந்த தேர்தலில் நாம் அனைவரும் எல்லா பகுதிகளிலும் சென்று வாக்கு கேட்கப் போகிறோம். பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் நமது கட்சி வசமே உள்ளது. நமது தலைவர்கள், உறுப்பினர்கள் பொதுமக்களின் சிறிய கோரிக்கைகளுக்கும் செவி சாய்த்து அதனை சரி செய்து கொடுக்க வேண்டும்.

அப்போதுதான், வாக்கு சேகரிக்க செல்லும்போது பொதுமக்கள் குறைபாடுகள் உள்ளது என குற்றச்சாட்டை வைக்க மாட்டார்கள். அதாவது, மக்கள் குறை கூறும் அளவில் எதுவும் இருக்கக் கூடாது. கட்சியில் உள்ள அனைவரது செயல்பாடுகளும் அறிக்கையாக தலைமைக்குச் சென்று கொண்டுதான் உள்ளது. ஆகையால், நல்ல பேர் வாங்க வேண்டும் என்றால், நல்ல முறையில் செயல்பட வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "நான் செய்யாமல் யார் செய்யவார்கள்".. முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்!

Last Updated : Feb 15, 2024, 12:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details