வேலூர்:கூட்டுறவுத்துறை சார்பில், வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைக்கப்பட்டுள்ள கற்பகம் கூட்டுறவு பெட்ரோல் வழங்கும் நிலையத்தை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (மார்ச் 13) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “தமிழகத்தில் சில தனியார் பெட்ரோல் நிலையங்கள் நேர்மையில்லாத வகையில் செயல்படுகிறது. பெட்ரோல் தரத்துடன் இல்லாமல் கலப்படம் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால், அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் கூட்டுறவு பெட்ரோல் நிலையங்கள், மக்களுக்கு தரத்துடன் நியாயமான முறையில் செயல்பட்டு” வருவதாக கூறினார்.
பின்னர், சித்தராமையா தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என தெரிவித்தது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர், “இது வரை கர்நாடகா அமைச்சர்கள் யாராவது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவோம் என தெரிவித்துள்ளார்களா? ஒருபோதும் அவர்கள் கூறியதில்லை. தற்பொழுதும் அப்படிதான் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றுதான் தண்ணீரை பெற்று வருகிறது” என்றார்.