கோயம்புத்தூர்:இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் நிலையில், மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியா கூட்டணி கோவை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளரான கணபதி ராஜ்குமார், இன்று (ஏப்.1) மணியகாரம்பாளையம் பகுதிக்குட்பட்ட காந்தி மாநகரில் பிரச்சாரத்தைத் துவங்கினார். அப்போது வீதி வீதியாகச் சென்று வாக்குகளைச் சேகரித்த அவர், அப்பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களிடமும் வாக்குகளைச் சேகரித்தார்.
அப்போது, வங்கிக்கணக்கில் மாதாமாதம் கலைஞர் உரிமத்தொகை ஆயிரம் ரூபாய் வருவதாகவும், இலவச பேருந்தால் கட்டணம் இன்றி பயணிப்பதாகவும் தெரிவித்த தூய்மை பணியாளர்கள், மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு தேவையானவற்றை வழங்கி வருவதுடன், தகுந்த பாதுகாப்பை அளித்து வருவதாகவும் கூறினர். மேலும், தங்கள் ஓட்டு உதயசூரியனுக்கே என வேட்பாளரிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர் கணபதி ராஜ்குமார், "இந்த நாடாளுமன்றத் தேர்தலை, ஒரு முக்கியமான தேர்தலாகப் பார்க்க வேண்டும். இந்தியாவே உற்றுநோக்கும் ஒரு தொகுதியாக, நமது கோவை மக்களவைத் தொகுதி அமைந்திருக்கிறது. பல இடர்பாடுகளுக்கு நடுவே, நிதி நெருக்கடியின் நடுவே பல சிறந்த திட்டங்களை மகளிருக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரே அரசாங்கம் திமுக தான்.