சென்னை:நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தல் தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் சூழலில், தமிழகத்தை பொருத்தமட்டில், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் கூட்டணிகள் மற்றும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உள்ளது. இதன் காரணமாக, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். மேலும், வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் மார்ச் மாதம் 27ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தங்களுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில், கடந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக சார்பாகக் கடந்த முறை தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை செளந்தரராஜன், தற்போது தன்னுடைய ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்த முறை பாஜக சார்பாகத் தென் சென்னை தொகுதியில் போட்டியிடக் களமிறங்கியுள்ளார்.