திருச்சி: திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையாவிற்கு ஆதரவாக திருச்சி மரக்கடை பகுதியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று பரப்புரை மேற்க்கொண்டார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "வரும் நாடாளுமன்ற தேர்தலில், மிகப்பெரிய வரலாற்றைப் படைப்பதற்காகவே அதிமுக, தேமுதிக கூட்டணி அமைந்துள்ளது.
குடிநீர் வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம் உள்ளிட்டவைகளை உயர்த்திய திமுக அரசுக்கு, இந்த தேர்தலில் நீங்கள் பாடத்தை புகட்ட வேண்டும். ரயிலில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை கட்டணம், முழுவதுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. அதற்கு திமுக அரசு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவில்லை. ஆனால், அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால், நிச்சயம் நாடாளுமன்றத்தில் அதற்காக குரல் எழுப்பி, அந்த கட்டண சலுகையை மீண்டும் மூத்த குடிமக்களுக்கு பெற்று தருவார்.
நாடாளுமன்றத்தில் உங்களுக்காக தனது குரலை ஒழிப்பதற்காக, கருப்பையா காத்திருக்கிறார். துவாக்குடி முதல் பால்பண்ணை வரையிலான உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை, இங்கு நீண்ட நாளாக இருந்து வருகிறது. அது உடனடியாக நிறைவேற்றித் தரப்படும். மேலும், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் விரைவு வண்டி நிற்க வேண்டும் என்கிற கோரிக்கை பொது மக்களிடம் இருந்து வருகிறது. அதுவும் ஆவணம் செய்யப்படும்.
BHEL தொழிற்சாலையை நம்பி, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருந்து வந்தனர். தற்போது அதனை மத்திய அரசு தனியார் மயமாக்கியதால், பலருக்கும் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிற்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில், மீண்டும் இதனை அரசு வேலையாக மாற்ற ஆவணம் செய்யப்படும். ஏப்ரல் 19ஆம் தேதி, காலை எழுந்தவுடன் சீக்கிரமாக சென்று வாக்களித்து விடுங்கள்.