சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கான விருப்ப மனு விநியோகத்தை தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.
பொது தொகுதிக்கு ரூபாய் 15 ஆயிரம், தனி தொகுதிக்கு ரூபாய் 10 ஆயிரம் என விருப்ப மனு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விருப்ப மனு விநியோகம், இன்று தொடங்கி நாளை (மார்ச் 20) மாலை 5 மணி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனு விநியோகத்திற்கு முன்னதாக, விருப்ப மனு படிவத்தை மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது, "இன்றைக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்கி உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் நல்ல அறிவிப்பு வெளிவரும்” என தெரிவித்தார்.