திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் ஆற்காடு குப்பம் ஊராட்சியில் 17,18 நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட அழகிய பங்களா போன்ற அரண்மனை குறி்த்து தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஆற்காடு குப்பம் ஊராட்சியில் 17,18 நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட சிற்றரசர்கள் தங்கும் பங்களா போன்ற அரண்மனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனையை சுற்றி உள்ள 10 ஊர் கிராமங்களை சேர்ந்த மக்கள் சாமி சிலைகளை கொண்டு வந்து வைத்து இந்த பங்களாவில் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் துறை அதிகாரிகள் இங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது ஈடிவி பாரத் தமிழ்நாடுவிடம் பேசிய தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன், "பங்களா போன்ற இந்த சிறிய அரண்மனையின் கட்டுமானத்தின் தன்மை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததன் பேரில் இது 17, 18 நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
அரண்மனை உட்புறத்தோற்றம் (Image credits-ETV Bharat Tamil Nadu) அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மன்னர்கள் ஓய்வெடுப்பதற்காக இதுபோன்ற சிறிய அரண்மனையை கட்டியிருக்கலாம் என்று தெரிகிறது. குறிப்பாக ஆந்திர மாநிலம் கார்வேட்டிநகர மகாராஜாக்கள் ஓய்வெடுப்பதற்காக இதுபோன்ற அரண்மனையை கட்டியிருக்கலாம்.
சிற்றரசர்கள் பயன்படுத்திய அரண்மனை:
அரண்மனையின் கூரைப்பகுதி தேக்கு மரங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. கீழ் பகுதி நான்கடி உயரத்திலும் 12 அடி அகலத்திலும் கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனையின் வடிவத்தை பார்க்கும்போது சிற்றரசர்கள் இங்கு தங்கி வரி வசூல் செய்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த அரண்மனையின் வடிவம், தரங்கம்பாடி கவர்னர் மாளிகை மற்றும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை ஆகியவற்றைப் போன்றே உள்ளது.
லோகநாதன், திருவள்ளூர் மாவட்ட தொல்லியல்துறை அதிகாரி (Image credits-ETV Bharat Tamil Nadu) முழுமையான தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் தொல்லியல் துறை தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. இந்த அரண்மனை செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையினால் கட்டப்பட்டுள்ளது. நான்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு செங்கலும் அழகான வடிவமைப்பில் உள்ளது. முக்கியமாக மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட இடத்துக்கு கீழே குதிரைகள் தங்கும் இடமும் கட்டப்பட்டுள்ளன. இந்த அரண்மனைக்கு செல்வதற்கு இப்போது புதிதாக சாலை போடப்பட்டுள்ளது. முழுவதுமாக ஆய்வு செய்த பின்னர் தொல்லியல் துறை சார்பாக மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்,"என்றார் அவர்.
பாதுகாக்க நடவடிக்கை தேவை:
இதுகுறித்து பேசிய அந்தப் பகுதியை சேர்ந்த சரவணன்,"இதை பொதுமக்கள் தோட்டத்து பங்களா என்று அழைத்து வந்தனர். இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
17, 18 நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட அழகிய அரண்மனை குறித்த சிறப்புத் தொகுப்பு (ETV Bharat Tamil Nadu) ஆனால், நாளடைவில் இந்த பங்களாவுக்கு வரும் பாதை புதர் மண்டி பயன்பாடு அற்றுபோயிருந்தது. பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் புதர்கள் அகற்றப்பட்டு, பாதை சீர் செய்யப்பட்டது. இந்த பங்களாவுக்கும் வெள்ளை அடிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தொல்லியல் துறை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.