சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25 ம் ஆண்டிற்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில், பல்வேறு புதிய திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து பல்வேறு கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களும் தங்களின் கருத்துகளைக் கூறிவருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு அரசின் நிதிநிலைகுறித்து பாமக சட்டப்பேரவைத் தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், "நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.
இதில், கல்வித்துறைக்கு 44 ஆயிரம் கோடி மாணவர்களுக்கு வழங்கப்படும். 5000 ஏரிகள் தூர்வாரி புதுப்பிக்கப்படும். வட சென்னை வளர்ச்சி திட்டம், அடையாறு புனரமைப்பு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்திற்குத் தர்மபுரி கிருஷ்ணகிரி குடிநீர் பயன்பாட்டுக்காக ஒகேனக்கல் இரண்டாம் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.
சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசிற்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பீகார் ஆந்திரா மேற்குவங்கம் ஒடிசா போன்ற பல மாநிலங்கள் சாதிவாரி நடத்தப்பட்டுச் செய்து, இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்தி உள்ளது. ஆனால், சமூக நீதியை நிலைநாட்ட, தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
குடிசை இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை 2012ல் நான் தான் சட்டப்பேரவையில் பேசினேன். அந்த வரிசையில் குடிசை இல்லா தமிழ்நாடு உருவாக்குவதற்கு , ஒரு லட்சம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாகக் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.