சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலப்பாக்கம் மெயின் ரோடு புத்தூர் கிராமம் அருகே 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. இதனை கண்ட அங்குள்ள குடோன் காவலாளி தேவராஜன் என்பவர் சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆய்வு செய்தபோது, இறந்து கிடந்த நபரின் கழுத்து அறுக்கப்பட்டு, உடல் மீது பிளாஸ்டிக் கவர் போடப்பட்டு, ஆரஞ்ச் கலர் துணியால் கை, கால் கட்டப்பட்டு இருந்துள்ளது. மேலும் அந்த நபரின் கை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டப்பட்ட காயங்களும் இருந்துள்ளன.
இதையடுத்து சேலையூர் போலீசார் சென்னை பரங்கிமலையில் உள்ள மோப்பநாய் ஸ்குவாட்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு டைசன் என்ற மோப்பநாய் சம்பவ இடத்திற்கு கொண்டுவரப்பட்டு ஆய்வு செய்தனர். அப்போது மோப்ப நாய் இறந்து கிடந்த நபரின் உடலை மோப்பம் பிடித்து விட்டு மேற்கு பகுதி நோக்கி 300 மீட்டர் தூரம் ஓடிச் சென்று பின்னர் திரும்பி வந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் துறை கூடுதல் இயக்குனர் பவானி ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை.. காரணம் என்ன?