சென்னை:தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் மாதம் முதல் பொதுத் தேர்வு தொடங்கப்படவுள்ளது. இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை, இந்த மாதத்திற்குள் நடத்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு, அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், பொதுத் தேர்வினை நடத்துவது குறித்தான ஆலோசனைக் கூட்டம், திருச்சியில் நேற்று முன்தினம் (பிப்.06) நடைபெற்றது. இதில் அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் வழங்கி உள்ள வழிகாட்டுதல்படி, முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், அரசுப் பொதுத் தேர்வுகளை முழுப் பொறுப்புடன் நடத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வு நடத்துவதற்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கியுள்ளது.
இதில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும், உரிய தேர்வுக் கால அட்டவணைகளை பள்ளிகளின் அறிவிப்பு பலகையிலும், சம்பந்தப்பட்ட வகுப்பறைகளிலும் ஒட்டுவதற்கு அறிவுரைகள் வழங்க வேண்டும். கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் வைக்கப்படும் அறைகளில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்தப்பட்டு, அவை செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
மேலும், கேள்வித்தாள் மற்றும் வினாத்தாள்களை, இரும்பு அலமாரிகளில் மட்டுமே வைத்து பூட்டப்படுதல் வேண்டும். தரையின் மீதோ அல்லது மேஜை மீதோ வைக்கப்பட்டிருத்தல் கூடாது. மாவட்டக் கல்வி அலுவலர்கள், தங்களது மாவட்டத்தில் எந்தவொரு தேர்வுப் பணி நியமனமும் விதிமுறைகளுக்குப் புறம்பாக இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
மேலும், எழுத்துப்பூர்வமான ஆணைகள் வழியாக மட்டுமே நியமனங்கள் செய்யப்பட வேண்டும். தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களை முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்தல் கூடாது. 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகாமல் உள்ள பிற அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களை, அரசுப் பள்ளிகளின் மூத்த ஆசிரியர்களைத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்ய வேண்டும்.
எக்காரணம் கொண்டும், தனியார் பள்ளிகளின் முதல்வர்களையோ, துணை முதல்வர்களையோ, ஆசிரியர்களையோ எந்த தேர்வு மையத்திற்கும் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்தல் கூடாது. அரசுப் பள்ளியைச் சார்ந்த ஆசிரியர்களே துறை அலுவலராக நியமனம் செய்யப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் மட்டும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களைத் துறை அலுவலராக நியமனம் செய்து கொள்ளலாம்.
ஒரு தேர்வு மையத்திற்கு நியமிக்கப்படும் முதன்மைக் கண்காணிப்பாளரும், துறை அலுவலரும் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்களாக இருத்தல் கூடாது. அறைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், தேர்வு நடைபெறும் அன்றைய பாடத்தினை கற்பிக்கும் ஆசிரியர்களாக இல்லாததை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும், மாவட்டக் கல்வி அலுவலரின் அனுமதியின்றி மாற்றமோ, பணிக்கு வராமல் இருப்பதோ கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அறைக் கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை வழங்கி உள்ளனர்.
இதையும் படிங்க:'மக்கள் பீதி அடைய வேண்டாம்'- தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து காவல் துறை விளக்கம்!