சென்னை :சமீபத்தில் வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் காரணமாக, தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக தமிழக வட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தது. அதிலும் விழுப்புரம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சரை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.
சமீபத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டத்திற்கு ரூ.2000 நிவாரண தொகையை அரசு அறிவித்திருந்தது. இதில், பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு மறுசான்றிதழ் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அந்த வகையில், அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் டிச 3ம் தேதி நாளிட்ட செய்தி வெளியீடு எண்:2110-ல் ஃபெஞ்சல் புயலின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கிட ஆணை வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இம்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர் பட்டயத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் தங்களது மாவட்ட ஆட்சியரால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.