தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு 7 நாட்கள் வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள்! - Orientation Programs in College

Guidance Training Classes : அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் 2024-25ஆம் கல்வியாண்டில் இளநிலைப் படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு ஜூலை 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வழிகாட்டும் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.

கல்லூரிக் கல்வி இயக்குநரகம் புகைப்படம்
கல்லூரிக் கல்வி இயக்குநரகம் புகைப்படம் (Credits - DIRECTORATE OF COLLEGIATE EDUCATION Official Site)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 7:21 PM IST

Updated : Jul 2, 2024, 8:12 PM IST

சென்னை:இது குறித்து கல்லூரிக்கல்வி இயக்குநர் கார்மேகம் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், ”பள்ளிக்கல்வியை சிறப்பாக முடித்துவிட்டு கல்லூரிகளுக்குள் கனவுகளுடன் காலெடுத்து வைத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களை உற்சாகமாக வரவேற்கிறோம்.

இவர்களை உயர்கல்வியின் அனைத்துக் கிளைகளிலும் ஊக்குவித்து ஒளிமயமான எதிர்காலம் நோக்கி ஆற்றுப்படுத்துவது கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கடமையாகும். இந்தப் புதிய முதலாமாண்டு மாணவர்களுக்கு, முதல் ஏழு நாள்களுக்கு (ஜூலை 3 முதல் 10 வரை) வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

இதன் மூலம் கல்லூரிக் கல்வி சார்ந்த இம்மாணவர்களின் கனவுகளுக்கு ஒரு நடைமுறைத் திட்டமிடலையும் எதிர் காலத்திற்குப் பயன்படும் வளமான நம்பிக்கைச் சிறகுகளையும் அளிக்க முடியுமென கருதுகிறோம். மேலும், எடுத்தவுடனேயே பாடப்பகுதிக்குள் நுழைந்து அச்சமும், மலைப்பும் மாணவர்களுக்குத் தோன்றா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியதும் இன்றியமையாததாகும்.

சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் வலுவான தாக்கங்களை நிகழ்த்தியுள்ள பல்வேறு சாதனையாளர்களை ஆசிரியர்கள், ஆய்வறிஞர்கள், அரசியல் ஆளுமைகள், தொல்லியலாளர்கள், விஞ்ஞானிகள், கல்வி வழிகாட்டுநர்கள், தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள், தடைகளைத் தாண்டி வெற்றி பெற்றுள்ள மூன்றாம் பாலினத்தார், உளவியல் நிபுணர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், கலை இலக்கியவாதிகள், பல்துறைக் கலைஞர்கள், முன்மாதிரிப் பெண் ஆளுமைகள், அமைச்சர்கள் , நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாணவர்களுடன் உரையாடுவதைக் கடமையாகக் கருதிச் செயல்படும் இந்திய ஆட்சிப் பணியாளர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் - முதலிய பலரையும் அழைத்துப் மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சியை மனந்திறந்த உரையாடலாகவும், வினா - விடை நிகழ்வாகவும் ஒருங்கிணைப்பதன் வழிப் புதுமுக மாணவர்களின் அறிவும் உணர்வும் பக்குவப்படுத்தப்பட்டு, அவரவர் இலக்கு நோக்கிய வெற்றிப் பயணத்தை மேலும் கூர்மைப்படுத்த முடியுமென நம்புகிறோம். நமது கல்லூரி வளாகங்களில் ஒரு மிக வளமான கல்விச் சூழலை ஏற்படுத்த இது உதவும் என்பதில் ஐயமில்லை .

இது ஓர் எளிய முதல் முயற்சிதான். ஆனால், அரசு கல்லூரி - அரசு உதவி பெறும் கல்லூரி - சுயநிதிக் கல்லூரி' என்ற அனைத்து வகைக் கலை அறிவியல் கல்லூரிகளிலும் இந்த வழிகாட்டும் வகுப்புகள் ஜூலை 3 முதல் 10 வரை யில் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டால், இந்த முதல் முயற்சியே முன்மாதிரி முயற்சியாகிவிடும். அனைத்துக் கல்லூரி முதல்வர்களும், பேராசிரியர்களும் ஒருங்கே திட்டமிட்டுச் செயல்பட்டு இந்த முயற்சி மாபெரும் வெற்றிபெற உதவும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க:“மாணவர்களிடையே கருத்து மோதல்கள் இருப்பது எதார்த்தம்”.. நெல்லை சம்பவம் குறித்து அப்பாவு கருத்து! - speaker appavu

Last Updated : Jul 2, 2024, 8:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details