சென்னை:தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10 பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் கலை, அறிவியியல் பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு பட்டம் வழங்கப்படுகிறது.
ஆனால், ஒவ்வொரு பலகலைக்கழகமும் ஓரு குறிப்பிட்ட நாட்களில் வகுப்புகளை தொடங்கி தேர்வு முடிவுகளை வெளியிடுகின்றனர். இதனால் ஒரு பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் முதுகலைப் படிப்புகளில் வேறு பல்கலைக்கழகத்தில் சேர்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரு குறிப்பிட்ட நாட்களில் வகுப்புகளை துவக்கி, தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும் என தெரிவிதிருந்தார்.
இந்த நிலையில், கல்லூரிக்கல்வி இயக்குனர் கார்மேகம் சென்னை, அழகப்பா, பெரியார், பாரதியார், மதுரை காமராஜர், பாரதிதாசன், மனோன்மணியம் சுந்தரானார், அண்ணாமலை, திருவள்ளுவர், அன்னை தெரசா ஆகிய பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இணைவு பெற்ற பல்கலைக்கழகங்கள் மூலமாக கல்லூரிக்கு, கல்லூரி மாறுபடும் வகையில் கல்லூரி வேலை நாங்கள், தேர்வு நாள்கள் மற்றும் பருவ விடுமுறை ஆகியன கடைபிடிக்கப்படுகின்றன.
மேலும், மாநில அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களில் பருவத் தேர்வுகள் தனித்தனியாக வெவ்வேறு நாள்களில் நடத்தப்படுகின்றன. இதனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முறையான கல்விச் சூழல் பாதிக்கப்படுவதோடு, பாடத்திட்டம் மாணவர்களுக்கும் பயன்தரும் பிற நிகழ்வுகளைக் கல்லூரிகளுக்கு உள்ளும் வெளியிலும் நிகழ்த்த திட்டமிடுவதில் தேவையற்ற குழப்பமும், நிச்சயமற்ற தன்மையும் நிலவுகின்றன.
இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாடத் தேர்வுகள் வெல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட வெவ்வேறு கல்லூரிகளில் ஒன்றுக்கொன்று பொருத்தமற்ற இடைவெளிகளில் நடத்தப்படுவதாலும், தேர்வு முடிவுகள் மிகவும் தாமதமாக வெளியிடப்படுவதாலும் முதுகலை மற்றும் முது அறிவியல் மாணவர் சேர்க்கையில் விரைந்து சேர முடியாமல் மாணவர்களும், பெற்றோரும் தொடர்ந்து பதற்றத்திலேயே தவித்திருக்கும் குழல் நிலவுகிறது.