மதுரை: ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்ததாக மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர், டெல்லியில் திரைப்பட இயக்குநர் அமீரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, அமீர் தனக்கு அமலாக்கத்துறையிடம் இருந்து அழுத்தம் ஏதும் கொடுக்கப்படுகிறதா என மதுரையில் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கம் தந்துள்ளார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு திடல் தொழுகையில் இயக்குநர் அமீர் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் அமீர், 'ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு நேற்று முடித்து, இன்று ரம்ஜான் பண்டிகையை (Ramadan festival) மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம். அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
இதையடுத்து, அமலாக்கத்துறை சோதனை தொடர்பான கேள்விக்கு, 'என்ன எடுத்தார்கள் என்று சொல்ல முடியாது. மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (NCB) 11 மணி நேர விசாரணை மற்றும் அமலாக்கத்துறை (ED) ரெய்டு நடந்தது உண்மைதான். ஆனால், என்ன எடுத்துள்ளார்கள் என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.
இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்து நான் சொல்வது ஒன்றுதான். எந்த விசாரணைக்கும் நான் தயார். என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நிரூபிப்பேன். 'இறைவன் மிகப்பெரியவன்' என்பதுதான் என்னிடம் வரும் வார்த்தை' என்று பதிலளித்தார்.