சென்னை: டெல்லியில் சுமார் ரூபாய் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உட்பட 5 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம் ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலமாக ஈட்டிய வருவாயை வைத்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உள்ளதால் அவர் மேற்கொள்ளும் தொழில்களில் யாரெல்லாம் ஜாபர் சாதிக்கிடம் மிகவும் நெருக்கமாக உள்ளவர்களை அதிகாரிகள் கண்டறிந்து அவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஜாபர் சாதிக் உடன் இணைந்து ஓட்டல் நடத்தி வந்த நடிகரும் இயக்குநருமான அமீருக்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று (மார்ச் 31) சமன் அனூப்பிருந்தனர். அதில் ஏப்ரல் 2 தேதி செவ்வாய்க்கிழமை டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.