தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஜிட்டல் கைது: ஊட்டியில் ஐ.டி.ஊழியரிடம் மோசடி; 8 நாட்கள் வீட்டில் அடைக்கப்பட்ட இளம்பெண்!

நீலகிரியில் டிஜிட்டல் கைது எனக்கூறி வீட்டிலிருந்து பணி செய்த ஐடி பெண் ஊழியரை, 8 நாட்கள் தனி அறையில் முடக்கி வைத்து லட்ச கணக்கிலான பணத்தை மோசடி செய்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

நீலகிரி:டிஜிட்டல் கைது என்று கூறி ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் இளம்பெண்ணை, 8 நாட்கள் தனி அறையில் சிறை வைத்து ரூ.15.90 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ள சம்பவம் தொடர்பாக, ஊட்டி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், டிஜிட்டல் கைது என்று கூறி மோசடி செய்தது தொடர்பாக இந்த ஆண்டு மட்டும் 28 புகார்கள் நீலகிரியில் பதிவாகியுள்ளது என்றும், இதன் மூலம் ரூ.68 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும் நீலகிரி சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம்பெண், கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சமீபகாலமாக அலுவலக உத்தரவின் பேரில் அவர் வீட்டிலிருந்து பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், வெளிநாட்டு தொலைப்பேசி எண்ணிலிருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.

இதில் பேசிய நபர் கூரியர் (Courier) நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி ஆங்கிலத்தில் பேசியுள்ளார். அதில் பேசிய நபர், மும்பையில் இருந்து சீனாவுக்கு தனியார் கூரியர் சர்வீஸ் மூலம் ஒரு பார்சல் செல்கிறது. அந்த பார்சலில், போதைப் பொருட்களுடன் உங்களுடைய பாஸ்போர்ட் (Passport), ஆதார் அட்டை (Aadhar card) மற்றும் கிரெடிட் கார்டு (Credit card) உள்ளிட்ட பொருட்கள் உள்ளது. சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் செல்வது குறித்து உங்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என்றும், விசாரணைக்காக அழைப்பை மும்பை சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றுவதாக கூறியுள்ளனர்.

டிஜிட்டல் கைது:

இதனையடுத்து, மும்பை சைபர் கிரைம் போலீசாரிடம் இருந்து பேசுவதாக கூறிய மர்ம நபர்கள், ஸ்கைப் வீடியோ கால் (Skype video call) அழைப்பில் 24 மணி நேரமும் இணைப்பில் இருக்க வேண்டும்.

உங்களுடைய பெயரை பயன்படுத்தி சட்ட விரோத செயல் நடந்திருப்பதால், உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்கிறோம் என்று கூறியுள்ளனர். மேலும், நாங்கள் கூறும் வரை வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லக்கூடாது, அதுவரை வீடியோ அழைப்பு பதிவு செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.

எட்டு நாட்கள் வீட்டு சிறை

தற்போது நடக்கும் விசாரணை குறித்து குடும்பத்தினர் உள்பட யாரிடமும் தெரிவிக்க கூடாது. அப்போதுதான் இந்த பிரச்சினையில் இருந்து உங்களை காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:வங்கி வாடிக்கையாளர் பணம் ரூ.7.5 கோடி கையாடல்; மேனேஜர் எஸ்கேப் - 2 பேர் கைது!

இதனால் பயந்து போன இளம்பெண் அவர்கள் சொல்வது அனைத்தையும் கேட்டுள்ளார். அதன்படி, விசாரணை 8 நாட்கள் நீடித்துள்ளது. எட்டு நாட்களும் இளம்பெண் வீட்டில் உள்ள தனி அறையில் சிறை வைக்கப்பட்டிருந்துள்ளார். இதனால், உணவு, இயற்கை உபாதகள், தூக்கம் உள்ளிட்ட பல விஷயங்களுக்காக மிகவும் அலைக்கழிக்கப்பட்டு அவதிப்பட்டுள்ளார்.

ரூ.15.90 லட்சம் பணம் மோசடி:

இறுதியாக விசாரணைக்காக உங்கள் கணக்கில் உள்ள பணத்தை அரசு கணக்கிற்கு மாற்ற வேண்டும். அந்தப் பணம் உங்களுடைய தான் என்று உறுதியானால் தான் உங்களை காப்பாற்ற முடியும் எனக்கூறி, குறிப்பிட்ட வங்கி கணக்கு விபரங்களை கொடுத்து, அந்த எண்ணிற்கு இளம்பெண்ணின் வங்கி கணக்கில் உள்ள தொகையை மாற்றக் கூறியுள்ளனர். இதை முழுவதும் நம்பிய இளம்பெண் தனது கணக்கில் இருந்து ரூ.15.90 லட்சத்தை மாற்றியுள்ளார்.

அதன் பின்னர் வீடியோ கால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும்,மர்ம நபர்களை அந்த இளம்பெண்ணால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் இது குறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சைபர் கிரைம் காவல்துறை

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு டிஜிட்டல் கைது என்று கூறி மிரட்டி பணம் பறிக்கப்பட்டதாக 28 புகார்கள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் ரூ. 68 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொடர்பு கொள்கின்றனர். இந்த மோசடிகளில் ஈடுபடும் நபர்களை வங்கிக் கணக்கு விவரம் அடிப்படையில் முதல் கட்டமாக அடையாளம் கண்டுள்ளோம். விரைவில் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், இதுபோன்று காவல் துறை, என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை என பல்வேறு இடங்களில் இருந்து பேசுவதாக கூறி தங்கள் மீது புகார் தெரிவித்து மிரட்டினால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் அல்லது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு தெரிவித்தால் மோசடி நபர்களிடமிருந்து பொதுமக்கள் பணம் காப்பாற்றப்படும். அதே சமயம் அவர்களின் மிரட்டலால் மன உளைச்சலுக்கு உள்ளாவதை தவிர்க்கலாம்” இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details