சென்னை:தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,244 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்து தேர்வு கடந்த 9 ந் தேதி நடைபெற்றது. இத்தேர்வை எழுத மொத்தம் 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பிருந்த நிலையில்,15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் தேர்வெழுதி உள்ளனர் எனவும், 4 லட்சத்து 45 ஆயிரத்து 115 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 என மொத்தம் 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2024 ஜனவரி 30ம் தேதி வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 28ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
அப்பதவி இடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு ஜூன் 9 ந் தேதி நடைபெற்றது.
38 மாவட்டங்களில் 7,247 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும் மொத்தம் 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். சென்னை மாவட்டத்தை பொருத்தவரை 432 மையங்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 276 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.