DHARMAPURI MP S senthilkumar தருமபுரி:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மார்ச் 27 வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது.
அதன்படி, 18வது மக்களவை தேர்தலில் திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைமை நேற்று வெளியிட்டது. அதில், ஆறு சிட்டிங் எம்.பிக்களுக்கு மீண்டும் சீட் தர திமுக தலைமை மறுத்து, புது முகங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள டாக்டர் எஸ்.செந்தில்குமாருக்கு இம்முறை சீட் மறுக்கப்பட்டு, ஆ.மணி என்ற வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரை சென்ற மாதம் சந்தித்து, தருமபுரி தொகுதியில் நீங்கள் செய்த பணி, செய்யத் தவறிய திட்டங்கள் என்ன என்பது குறித்து நேர்காணல் செய்திருந்தோம்.
அப்போது, நாடாளுமன்ற உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் முடிவு பெற்றுள்ளது, வரும் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிடப் போகிறீர்களா என்ற நமது கேள்விக்கு பதிலளித்தவர், “திமுக எனக்கு வழங்கிய பொறுப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறேன் என்ற மனநிறைவு இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை மிகப்பெரிய கட்சி, மிகப்பெரிய வரலாறு உள்ள கட்சி.
அவர்களுக்கு தெரியும், யாரை நிற்க வைத்தால் வெற்றி பெற வைக்க முடியும், யாரை நிற்க வைக்க வேண்டும், யாரு,க்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரியும். தலைமை எப்பொழுதும் சரியான முடிவு எடுக்கும். இது மிக முக்கியமான தேர்தல் அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதற்கு கட்டுப்பட்டு அனைத்து தொண்டர்களும், நான் உட்பட தேர்தலில் வெற்றியை மட்டுமே நோக்கி தலைமைக்கு சமர்ப்பிப்போம் என்ற வேலையில்தான் இருக்கின்றோம்” என்றார்.
மேலும், “நான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளின் வேலைகள் முடிவடையாமல் இருக்கலாம், ஆனால் அதனுடைய தொடக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் தொய்வு இல்லாமல் நடைபெற்று கொண்டிருக்கும். எல்லா பணிகளையும் செய்து முடித்த மனதிருப்தி இருக்கிறது. ஆனால், ஒகேனக்கல் காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலமாக, ஏரிகளை நிரப்பக்கூடிய அந்த ஒரு திட்டம் மட்டும் தான் வந்து செயலாக்கம் இல்லாமல் இருக்கிறது” என்றார்.
இதையும் படிங்க:பாஜக 20 தொகுதிகளில் போட்டி.. ஓபிஎஸ் போட்டியிடவில்லையா? - OPS Seat Sharing