சென்னை:பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 1999-ஆம் நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பு.த.இளங்கோவன். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த இவர், 2004 தேர்தலில் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாமகவில் இருந்து விலகினார்.
பின்னர் கடந்த 2014-ஆம் ஆண்டு அதிமுகவில் தன்னை இணைத்துகொண்ட அவருக்கு 2016 தேர்தலில் தருமபுரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளித்தார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனாலும், அந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்.
தற்போது அதிமுகவில் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பு.த.இளங்கோவன், ஜெயலலிதா மறைவுக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் என இரண்டாக அதிமுக பிளவுபட்ட பிறகு தன்னை யாருக்கான ஆதரவாளர் என்று காட்டிக்கொள்ளாமல் அமைதி காத்து வந்த நிலையில், இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துகொண்டார்.