தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024, தருமபுரி தொகுதி:இருமுனைப் போட்டியில் வெல்லப் போவது யார்? -Dharmapuri Election Result - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election Results 2024 Live Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 9,671 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தருமபுரி தொகுதி வேட்பாளர்கள்
தருமபுரி தொகுதி வேட்பாளர்கள் (GFX Credit -ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 7:01 PM IST

Updated : Jun 3, 2024, 6:34 PM IST

தருமபுரி: தருமபுரி மாவட்டம், கடந்த 1965ஆம் ஆண்டு அக்.2ஆம் தேதி சேலம் மாவட்டத்திலிருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவானது. இம்மாவட்டம், சங்க காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்டது. வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி இப்பகுதியை ஆட்சி செய்தார். தருமபுரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 4.497.77 சதுர கி.மீ.

மக்கள்தொகை: கடந்த 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை 15,06,843 ஆக இருந்தது. இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் முறையே 7,74,303 மற்றும் 7,32,540.

தொகுதிகள்: தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம், மேட்டூா் என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இம்மாவட்டத்தில், 70% மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால் விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

சந்தித்துள்ள தேர்தல்கள்: தருமபுரி, நாடாளுமன்ற தொகுதியாக உருவான பிறகு இதுவரை மொத்தம் 13 தேர்தல்களை சந்தித்துள்ளது. இவற்றில் அதிமுக இரண்டு முறையும், திமுக மூன்று முறையும், பாமக நான்கு முறையும், காங்கிரஸ் கட்சி இரண்டு முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும், சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

2019 தேர்தலில் பதிவான வாக்குகள்: கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 14,84,027 வாக்காளர்கள் உள்ள நிலையில், ஆண்கள் 7,55,323 வாக்காளர்களும், பெண்கள் 7,28,574 வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 130 வாக்காளர்களும் உள்ளனர். இத்தேர்தலில், 12,23,205 வாக்குகள் (85.1%) பதிவாகின.

திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் எஸ்.செந்தில்குமார் 5,74,988 வாக்குகள் பெற்று 70,753 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக அன்புமணி ராமதாஸ் 5,04,235 வாக்குகள் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட பழனியப்பன் 53,655 வாக்குகள் பெற்றார்.

அன்புமணி ராமதாஸ் அதிமுக - பாஜக கூட்டணியில் போட்டியிட்டார். அவா் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்முறையாக போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில்குமாரிடம் தோல்வி அடைந்தார்.

2024 தோ்தலில் பதிவான வாக்குகள்: தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில், 2024 ஆம் ஆண்டு மொத்தம் 15,24,896 வாக்காளா்கள் உள்ள நிலையில், ஆண்கள் 7,70,897 வாக்காளர்களும், பெண்கள் 7,53,820 வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 179 வாக்காளர்கள் உள்ள நிலையில், 12,38,184 வாக்குகள் (81.20%) பதிவாகி உள்ளன.

தொகுதியின் முக்கிய வேட்பாளர்கள்:பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி பாமக சார்பிலும், திமுக சார்பில் வழக்கறிஞர் ஆ.மணி, அதிமுக சார்பில் மருத்துவர் அசோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பொன்னிவளவன் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளராக பார்க்கப்படுகின்றனர்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ், தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவருக்கு பதிலாக பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சார்ந்த அரசாங்கம் என்பவரை பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர், சௌமியா அன்புமணி போட்டிடுவார் என பாமக தலைமை அறிவித்தது.

சௌமியா அன்புமணி வேட்பாளராக முதல்முறையாக போட்டியிட்டுள்ளார். இதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் பாமக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரம் செய்த மாவட்டம் என்பதால் அவருக்கு வரவேற்பு மிகுதியாகவே காணப்பட்டது.

சௌமியா அன்புமணி பிரச்சாரம்: ஆறு சட்டப்பேரவை தொகுதிகளிலும் கிராமத்தை மையமாக வைத்து தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக அன்புமணி ராமதாஸ் நான்கு நாட்களும், மருத்துவர் ராமதாஸ் இரண்டு நாட்களும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக அவரது மகள்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இது தேர்தல் பிரச்சாரத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் விவசாயிகள் பிரச்னையை மையப்படுத்தியும், மது ஒழிப்பை வலியுறுத்தியும், பிரச்சாரம் மேற்கொண்டதால் பெண்களிடம் சௌமியா அன்புமணிக்கு வரவேற்பு இருந்தது.

பாமக சார்பில் நிறுத்தப்படும் முதல் பெண் வேட்பாளர் என்பதால், அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக திமுக வேட்பாளர்கள் செல்லாத இடங்களுக்கு கூட செளமியா அன்புமணி சென்று வாக்கு சேகரித்தார். அதிகளவு பெண்களை சந்தித்தார். அவை அனைத்தும் அவர்களுக்கு வாக்காக அமைந்திருக்குமா என்பதை ஜூன் 4ஆம் தேதி தான் தெரிய வரும்.

திமுக வேட்பாளரின் தீவிர பிரச்சாரம்:திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்வழக்கறிஞர் ஆ.மணி தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு தொகுதியில் பம்பரமாக சுழன்று வேலை செய்தார்.

பழனியப்பன், தான் சார்ந்த சமூக மக்களை அரவணைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொகுதிக்கு உட்பட்ட முக்கிய விஐபிகளை தனிப்பட்ட முறையில் சந்தித்து வாக்கு சேகரித்தார். திமுகவிற்கு இஸ்லாமிய - கிறிஸ்தவ மத குருமார்கள் தங்கள் ஆதரவை நேரில் தெரிவித்திருந்தனர்.

தருமபுரி தொகுதியின் சிட்டிங் எம்பியான செந்தில்குமார் தனியாகச் சென்று திமுக சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். திமுகவை பொருத்தவரை அதன் கூட்டணி கட்சி பலம் மற்றும் தமிழக அரசின் திட்டங்களான பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி, இலவச பேருந்து பயணம் போன்றவை எடுத்துரைத்து பெண் வாக்காளர்களை கவர திமுக தலைவர்கள், நிர்வாகிகள் முயன்றனர்.

ஆ.மணி ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பதால், அவருக்கு இந்த முறையில் மக்கள் வாய்ப்பு தரலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

அதிமுக வேட்பாளரின் பிரச்சார உத்தி:அதிமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் அசோகன், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில், தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதன்முறையாக தேர்தலை சந்திக்கிறார்.

இவரது தந்தை பூக்கடை ரவி, தருமபுரி அதிமுக நகரச் செயலாளராக இருக்கிறார். இவர் தனது மகனை சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக பதவியில் அமர வைக்க வேண்டும் என்ற கனவை நினைவாக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு பெற்று மாவட்டம் முழுவதும் பம்பரமாக சுழன்று தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டார்.

அதிமுக பலமாக உள்ள பாலக்கோடு தொகுதியில் அதிமுகவிற்கு கூடுதலான வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அத்தொகுதியில் 2,04,018 வாக்குகள் பதிவாகியுள்ளது. மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் பதிவான தொகுதி பேரை பெற்றுள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், தருமபுரி தொகுதியில் குறிப்பிட்ட அளவு வாக்குகளும், பென்னாகரம் மற்றும் மேட்டூர் பகுதியில் ஓரளவு கணிசமான வாக்குகளும் அதிமுகவுக்கு கிடைக்கும் என்றும், விவசாயிகள் வாக்கு அதிமுகவிற்கு தான் விழுந்துள்ளது என்ற எதிர்பார்ப்பில் அதிமுகவினர் உள்ளனர்.

நாதக வேட்பாளரின் இலக்கு: நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அபிநயா பொன்னிவளவன் மாவட்டத்தில் ஓரளவு அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். நாதவிற்கு புதிய வாக்காளர்கள் அதிக அளவு வாக்களிப்பார்கள் என்பதால் இளைஞர்களை குறிவைத்து பரப்புரை மேற்கொண்டார். முதல் தலைமுறை வாக்காளர்கள் சீமான் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு நாம் தமிழர் கட்சிக்கான ஆதரவு பெருகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தோ்தலில் கணிசமான வாக்குகளை நாம் தமிழா் கட்சி பெறும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

2024 நாடாளுமன்ற தோ்தலில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், தருமபுரி தொகுதியில் தான் அதிக அளவு (81.48%.) வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தருமபுரியை கைப்பற்றப்போவது யார்?: வழக்கமாக தருமபுரி தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி சாதி என்ற நிலை மாறி, இப்போது பெண்களின் வாக்கை மையப்படுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் சௌமியா அன்புமணியை களம் இறக்கி உள்ளார்.

திமுக, பாமக இடையே இருமுனைப் போட்டி நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், இவற்றில் எந்தக் கட்சியின் வேட்பாளர் வெற்றிப் பெறுவார் என்பது ஜுன் 4-இல் தெரிந்துவிடும்.

இதையும் படிங்க:3 நாட்கள் தியானம் செய்ய கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! - PM Modi Visits Kanyakumari

Last Updated : Jun 3, 2024, 6:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details