தருமபுரி:தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அடுத்தடுத்து இருவர் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த கணேசனுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், 60 அடி ஆழமுள்ள கிணறு ஒன்றுள்ளது. கணேசன் அந்த கிணற்றை ஆழப்படுத்தும் பணிக்காக கீரியூர் பகுதியைச் சேர்ந்த பச்சியப்பன் (50), என்பவரை அழைத்து பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.
கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது வெடி வைத்ததாக தெரிகிறது. அந்த வெடி வெடித்த தாக்கத்தால் கிணற்றின் பக்கவாட்டு பகுதியில் மண் சரிந்ததுள்ளது. அதை அப்புறப்படுத்த முயன்ற பச்சியப்பன் எதிர்பாராத விதமாக மேலும் மண் சரிந்ததில் மண்சரிவில் சிக்கியுள்ளார். உடனடியாக மற்ற தொழிலாளர்கள் பொதுமக்கள் உதவியுடன் பச்சியப்பனை மீட்ட நிலையில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பக்கத்து விவசாய தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் பச்சியப்பனை காண விரைந்து வந்து பச்சியப்பன் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியில் நின்றிருந்துள்ளனர். அதில் விருதானூர் பகுதியைச் சேர்ந்த முருகம்மாள் (51) தவறி கிணற்றுக்குள் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.