தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

Updated : 3 hours ago

ETV Bharat / state

வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் தருமபுரி.. அரசை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்! - Dharmapuri farmers issue

தருமபுரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றி வருவதால் வறட்சியின் பிடியில் சிக்கி பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதனால், அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மழையின்றி வாடும் பயிர்கள், விவசாயி
மழையின்றி வாடும் பயிர்கள், விவசாயி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

தருமபுரி: தருமபுரி மாவட்டம் முழுவதுமாக விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டது. இப்பகுதி மக்கள் பிரதான தொழிலாக விவசாயத்தையும், கால்நடைகளை வளர்த்தும் அதன் மூலம் கிடைக்கும் பால் விற்பனை செய்தும் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இதில், பென்னாகரம் பகுதியில் விவசாயிகள் அதிக அளவு சிறு தானியங்களை சாகுபடி செய்வது வழக்கம்.

கருகி வாடும் சிறுதானியங்கள்:‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகள் ஆடி மாதத்தில் வரும் பருவ மழையை நம்பி நிலக்கடலை, சோளம், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை விதைத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து இரண்டு மாதங்களாக பருவமழை பெய்யாத காரணத்தினால், விதைக்கப்பட்ட சிறுதானியங்கள் மற்றும் நிலக்கடலைகள் வீசும் வெப்பக் காற்றால் கருகி வாடுகின்றன.

மாவட்டத்தில் தற்போது வெப்பநிலை 95 டிகிரி வரை பதிவாகி வருகிறது. பொதுவாக கோடை காலத்தில் பதிவாகும் வெப்பநிலை தற்பொழுது மழைக்காலத்திலேயே பதிவாகி வருகிறது. மழை பெய்யக்கூடிய ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழை இல்லாததால் விதைக்கப்பட்ட விதைகள் முளைத்து வெயிலில் காய்ந்து சருகாகி வருகிறது.

தருமபுரி வறட்சியில் கருகும் பயிர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு:கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் சோளம் காய்ந்து வருவதால், கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பென்னாகரம் பகுதியில் சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பு தண்ணீர் இன்றி வறண்டு வருகிறது.

இதையும் படிங்க:தருமபுரி அருகே ஒற்றை காட்டு யானை அட்டகாசம்.. மிதிப்பட்டு இறந்த விவசாயிகள்!

வறட்சியின் பிடியில் தருமபுரி:கர்நாடகாவில் உருவாகும் காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் மாவட்டமாக தருமபுரி மாவட்டம் உள்ளது. மேலும், தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் பகுதியில் தான் ஒகேனக்கல் காவிரி ஆறு நுழைந்து, மேட்டூர் அணையைச் சென்று அங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் பயன்பட்டு வருகிறது. அத்தகைய கேனக்கல் காவிரி ஆறு நுழைவு பகுதியாக உள்ள தருமபுரி மாவட்டம் தற்போது வறட்சியின் பிடியில் உள்ளது.

விவசாயிகள் பாதிப்பு:வறட்சியின் காரணமாக இங்குள்ள விவசாயிகள் விவசாயத்தை விட்டு விட்டு பெங்களூரு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொத்தனார் வேலைகளுக்கு சென்று வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பவர்களுக்கு தீவன தட்டுப்பாடு காரணமாகவும், பால் விலை குறைந்த அளவில் கொள்முதல் செய்வதாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசுக்கு கோரிக்கை: இதனால், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஒகேனக்கலில் இருந்து உபரி நீா் திட்டத்தை செயல்படுத்தி வறண்ட பூமியில் செழுமையான பூமியாக மாற்ற வழிவகை செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : 3 hours ago

ABOUT THE AUTHOR

...view details