தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நுணுக்கமான அழகிய சிற்பங்களை கொண்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்...சுற்றுலா பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம்! - AIRAVATESVARA TEMPLE

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் பெயர் காரணம் என்ன? கோயிலில் உள்ள சிறப்பம்சங்கள் யாவை? நுண்ணிய சிற்பங்களில் வரலாறு என்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
ஐராவதீஸ்வரர் திருக்கோயில் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2024, 3:40 PM IST

தஞ்சாவூர்:கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியில் எண்ணற்ற கண்ணை கவரும் அழகிய சிற்பங்களை கொண்ட ஸ்ரீ தெய்வநாயகி சமேத ஸ்ரீ ஐராவதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 12-ஆம் நூற்றாண்டில் 2ஆம் இராஜராஜசோழனால் கட்டப்பட்ட இத்திருக்கோயிலை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் நிர்வாகம் செய்கின்ற நிலையில், 1954ஆம் ஆண்டு முதல் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றது.

இந்த திருக்கோயிலை, கடந்த 1995 ஆம் ஆண்டு, உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்து பெருமைபடுத்தியுள்ளது. சோழர் கால சிற்ப கலைக்கு மிகப்பெரிய சான்றாக விளங்கும் இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் பல வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து சோழ சாம்ராஜ்யத்தின் அற்புதமான கருங்கல்கல் படைப்பை நேரில் கண்டு ரசித்து செல்கின்றனர். இக்கோயில், பண்டைய கால சோழ மன்னர்களின் அறிவியல் மற்றும் அறிவு திறமைக்கும், கட்டிட கலைக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்.

சிறப்பு அம்சங்கள்:கோயிலில் முன்பகுதியும், பின்பகுதியும் பிரமாண்டபமாக அமைக்கப்பட்டடிருந்தாலும், இங்குள்ள சிறிய அளவிலான லட்சக்கணக்கான கலை நயம் மிக்க கற்சிற்பங்கள் கண்ணை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இக்கோயிலில் இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் அமைந்துள்ளது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்திற்கு ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். இக்கோயில் கருவறை விமானம் ஐந்து நிலை மாடங்களுடன், 24 மீ (80 அடி) உயரம் கொண்டதாகும்.

சிற்பிகளின் கனவு: “சிற்பிகளின் கனவு” என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்திருக்கிறது. இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள கலை வடிவங்கள், நாட்டிய முத்திரைகள் என அரிய சிற்ப கலைப்படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது. 63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கோயில் வரலாறு: கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த, 2ஆம் இராஜராஜன் தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றிய பிறகு அங்கு இந்த கோயிலை கட்டியுள்ளார். முதலில் ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டு பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தக்கயாகப் பரணி இந்த கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

கரக்கோயில் வகை:இக்கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில், இராஜராஜசோழனுக்கும் அவரது ஐந்து மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேர் வடிவமைப்பிலான இக்கோயில் கரக்கோயில் என்ற வகையைச் சேர்ந்தது என்பதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியப் படைப்புகளில் காணப்படுகின்றன.

தேர் வடிவிலான நுழைவு வாயில்: தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் இரண்டையும் ஒப்பிடுகையில் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் சிறியதாக இருந்தாலும், இக்கோயில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்ததாய் உள்ளது. கோயிலின் முதன்மை நுழைவு வாயில் கிழக்குப்புறம் நோக்கி அமைந்துள்ள நிலையில், முன் மண்டபத்தின் தென்பகுதி கல்லாலான சக்கரங்களுடன் குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் தேர் வடிவில் உள்ளது.

இதையும் படிங்க:களை கட்டும் கார்த்திகை, சபரிமலை ஐயப்பன் சீசன்! பழனி முருகனை காண படையெடுக்கம் பக்தர்கள்..

சரிகமபத நீ சொல்லும் இசைப்படிகள்:இக்கோயிலில் உள்ள பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள், தட்டும்போது சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன.

ராஜகம்பீரன் திருமண்டபம்:ராஜகம்பீரன் திருமண்டபம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம், யானைகளாலும், குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும், குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் இருக்கும். குதிரைகள், யானைகள் பூட்டப்பட்ட ரதத்தின் அமைப்பில் இருக்கும் இம்மண்டபம், நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்களால் அமைந்திருக்கிறது.

மகாமண்டபத் தூண்கள்:கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும், நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்துள்ளார். கருவறையில் லிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது மற்ற சிவன் கோயில்களில் காணப்படாத ஒன்றாகும்.

எட்டு கைகளுடன் அர்த்தநாரீஸ்வரர்:கோயிலின் வெளிச்சுவர்களில் மூன்று முகங்கள், எட்டு கைகளுடன் அர்த்தநாரீஸ்வரர், மேல்கரங்களில் சிவனுக்குரிய மானுடன் கோடாலியும், கீழ்கரங்களில் புல்லாங்குழல் ஏந்திய சிவனும், குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன் என பல சிற்பங்கள் உள்ளன. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பமாகும். எமதர்மன் சாபம் பெற்றதால் நேரிட்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால், அக்குளம் "எமதீர்த்தம்" எனவும் அழைக்கப்படுகிறது.

தாராசுரம் ஊர் பெயர் காரணம்: மரணமற்ற பெருவாழ்வு வாழவும், தேவர்களை வெல்லவும் தாரன் என்ற அசுரன் இத்தலத்து இறைவனை பூஜித்து, தவமிருந்து தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இத்தலம் உள்ள இடம் தாராசுரம் என்றானது என்றும் கூறுப்படுகிறது.

இது குறித்து கும்பகோணம் சிற்ப கலை சுற்றுலா வழிகாட்டி சரவணன் ஈடிவி பாரத் தமிழ்நாடுவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் திருக்கோயிலில் இந்திரனின் வாகனம் ஐராவதம் இங்கு பூஜை செய்து, சாப விமோசனம் அடைந்ததாக வரலாறு உண்டு. கோயில் முழுவதும் கற்களால் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள சிற்பங்களை விரல்களால் அளவிட முடியும். லட்சக்கணக்கான சிறிய வடிவிலான அழகிய நுணுக்கமான சிற்பங்களை தன்னகத்தே கொண்ட கோயில். அரை அங்குலம் முதல் ஒரு அடி உயரத்திற்குள் எண்ணற்ற கலை படைப்புகள் அதிகம் காணப்படுகிறது" என தெரிவித்தார்.

சமூக ஆர்வலர் கம்சன் கூறுகையில், “2 ஆம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட கற்றழி கல்லால் தேர் வடிவில் கட்டப்பட்ட அழகிய கோயில். தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இக்கோயிலுக்கு வருகை புரிகின்றனர். நுணுக்கமான சிற்பங்கள் நிறைந்த கோயிலாகும்” என தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details