தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநெல்வேலி பள்ளி மாணவர்களிடையே நீடிக்கும் மோதல்.. டிஜிபி சங்கர் ஜிவால் அவசர ஆலோசனை! - DGP Shankar Jiwal

பள்ளி மாணவர்களிடையே சாதி ரீதியாக பல்வேறு மோதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.

டிஜிபி சங்கர் ஜிவால்
டிஜிபி சங்கர் ஜிவால் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2024, 10:36 PM IST

திருநெல்வேலி: பள்ளி மாணவர்களிடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) சங்கர் ஜிவால் தலைமையில், மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, திருநெல்வேலி காவல்துறை ஆணையாளரும் ஐஜியுமான ரூபேஷ் குமார் மீனா, திருநெல்வேலி சரக டிஐஜி டாக்டர் மூர்த்தி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம். திருநெல்வேலி மாநகர துணை ஆணையர்கள் அனிதா, கீதா மற்றும் விஜயகுமார், உதவி ஐஜி ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

கொலை சம்பவங்கள் குறித்து ஆலோசனை:இந்த ஆலோசனையில், திருநெல்வேலி சரகத்தில் உள்ள காவல் நிலையங்களில் விசாரிக்கப்படும் முக்கியமான வழக்குகளின் தன்மை குறித்தும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் டிஜிபி சங்கர் ஜிவால் கேட்டறிந்துள்ளார்.குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சாதி ரீதியாக நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் குறித்தும், அவற்றை தடுப்பதற்கு எடுகப்பபட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:எஸ்பிஐ ஏடிஎம் மட்டும் டார்கெட் ஏன்? - வடமாநில கொள்ளையர்களிடம் நடந்த விசாரணையில் வெளியான திடுக் தகவல்!

சாதி வன்கொடுமையில் திருநெல்வேலி 2-வது இடம்:தமிழகத்தின் சாதிய வன்கொடுமைகள் அதிகம் கடைபிடிக்கப்படும் மாவட்டங்களில் திருநெல்வேலி இரண்டாவது இடத்தில் இருப்பதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது. மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே சாதி ரீதியாக பல்வேறு மோதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

சாதிய வன்கொடுமை தடுப்பு நடவடிக்கை: குறிப்பாக, கடந்தாண்டு நாங்குநேரியில் சின்னத்துரை என்ற மாணவர் வீடு புகுந்து வெட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தற்போது வரை அடுத்தடுத்து பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. எனவே, இது போன்ற சூழ்நிலையில் மாணவர்கள் மத்தியில் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளிகளில் சாதிய வன்கொடுமையக கடைப்பிடிக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் டிஜிபி சக அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

மேலும், நெல்லையில் ரவுடிகளின் நடவடிக்கை குறித்தும் டிஜிபி சங்கர் ஜிவால் கேட்டறிந்துள்ளார். தொடர்ந்து, நாளை இரண்டாவது நாளாக டிஜிபி சங்கர் ஜிவால் திருநெல்வேலி சரகத்தில் காவலர்களின் பணியிட மாறுதல் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அதை தொடர்ந்து சிபிசிஐடி, எஸ்பிசிஐடி, க்யூ பிரிவு, நக்சலைட் தடுப்பு பிரிவு, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போன்ற சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த மண்டல காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி சங்கர் ஜிவால் பங்கேற்கிறார்.

பின்னர், உதவி ஆய்வாளர் முதல் உயரதிகாரிகள் வரை அனைத்து காவல் அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு குறித்து டிஜிபி ஆலோசனை மேற்கொள்கிறார். இறுதியாக அனைத்து காவல்துறையினர் உடன் சேர்ந்து மதிய உணவு அருந்துகிறார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details