தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால்' - காக்கி உடையில் கண் கலங்கிய டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன்! - ak viswanathan retirement - AK VISWANATHAN RETIREMENT

dgp ak viswanathan farewell speech: இன்று தான் காக்கி உடை அணியும் கடைசி நாள் என்று பணி ஒய்வு பெற்ற டிஜிபி ஏகே விஸ்வநாதன் பிரிவு உபச்சார விழாவில் உருக்கமாக பேசினார்.

முன்னாள் டிஜிபி ஏகே விஸ்வநாதன் (கோப்புப் படம்)
முன்னாள் டிஜிபி ஏகே விஸ்வநாதன் (கோப்புப் படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 10:37 AM IST

சென்னை: தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் டிஜிபியாக இருந்த ஏ.கே. விஸ்வநாதன் ஓய்வு பெற்றதையொட்டி, நேற்று (ஜூலை 31) அவருக்கான பிரிவு உபச்சார விழாவானது எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண், ஏடிஜிபிக்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும், ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அதிவிரைவு படை, கமாண்டோ படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை உள்ளிட்ட படையினரின் அணிவகுப்பு மரியாதையை திறந்த வாகனத்தில் சென்று டிஜிபி ஏ.கே விஸ்வநாதன் ஏற்று கொண்டார்.

சென்னை காவல் ஆணையர் அருண்: இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய சென்னை காவல் ஆணையர் அருண், " 20 ஆண்டுகளாக சென்னை காவல் துறையில் பணியாற்றி இருக்கிறேன். அவ்வாறு சென்னையில் பணியாற்றும்போது தனது ஏழாவது காவல் ஆணையராக ஏ.கே. விஸ்வநாதன் இருந்தார். அவரின் கீழ் பணியாற்றியது நல்ல அனுபவத்தை கொடுத்தது. சிரித்த முகத்துடன் வரவேற்று எளிமையாக பழகக் கூடியவர். கொரோனா காலத்தில் காவல்துறையை சிறப்பாக வழி நடத்தியதாகவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி இறப்பின் போது தகுந்த பாதுகாப்பை வழங்க ஏற்பாடு செய்தவர்" எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழகடிஜிபி சங்கர் ஜிவால்: இதைத்தொடர்ந்து பேசிய தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், " இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள காவல்துறை அதிகாரிகள், விருந்தினர்களை பார்க்கும் போது ஏ.கே.விஸ்வநாதன் தமிழக காவல்துறையில் எந்த அளவுக்கு நன்மதிப்பை பெற்றுள்ளார் என்பது தெரிகிறது. சில அதிகாரிகள் தேர்ச்சி பெற்று பணிக்கு வந்து விடுவார்கள். ஆனால், ஏ.கே.விஸ்வநாதன் அது போல அல்ல. 3 தலைமுறையாக அவரது குடும்பம் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். அவர் காவல்துறையில் பணிக்கு வர வேண்டும் என்ற எண்ணமாக இருந்தது. அவர் எங்கு வேலை பார்த்தாலும் மகிழ்ச்சியோடு பணியாற்றுபவர். சிலர் மகிழ்ச்சியாக பணியாற்றுவதை தவற விடுகின்றனர்.

ஏ.கே.விஸ்வநாதன் ஊர்க்காவல் படையில் பணியாற்றிய போது கூட சிறப்பாக பணியாற்றி உள்ளார். ஏ.கே.விஸ்வநாதனுக்கு காவல்துறையில் நிறைய வெற்றி சாதனைகள் இருக்கிறது. குறிப்பாக ஏ.கே.விஸ்வநாதனுக்கு காவல்துறையில் பணியாற்றுபபவர்களின் நலனில் மிகுந்த அக்கறை உண்டு. சில அதிகாரிகள் ஓய்வு பெற்ற பிறகு காவல்துறையை விட்டு விலகி சென்று விடுவார்கள். ஆனால், ஏ.கே.விஸ்வநாதன் அது போல் கிடையாது. அவரது குடும்பமே காவல்துறையுடன் ஒன்றிணைந்து இருப்பார்கள். ஓய்வு எடுத்து விட்டு பயணம் செய்ய சொல்லி உள்ளேன். இன்னும் ஒரு ஆண்டு பொறுத்து இருங்கள். நானும் வந்து இணைகிறேன் என்று தனது ஓய்வு பெற உள்ளதை மறைமுகமாக டிஜிபி சங்கர் ஜிவால் பேசினார்.

டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன்: பின்னர் மேடையில் பேசிய டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன், பிரிவு உபச்சார நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்ததற்காக காவல்துறை அதிகாரிகளுக்கும் முதல்வருக்கும் நன்றி. மிடுக்குடனும் சிறப்பாகவும் அணிவகுப்பு நடத்திய படை வீரர்களுக்கு நன்றி. 34 ஆண்டுகளாக பேர் தெரியும் வகையில் தமிழக காவல்துறையில் பணியாற்றி உள்ளேன். தனது தாத்தா, தந்தைக்குப் பிறகு மூன்றாவது தலைமுறையாக தமிழக காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெறுவதை பெருமை கொள்கிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த மனைவி, மகள் மற்றும் காவல்துறையினர் என அனைவருக்கும் நன்றி. தான் பணிபுரிந்த காவல்துறையில் எந்த பதவி கொடுத்தாலும் அதில் என்ன திட்டங்கள் புதிதாக நடைமுறைக்கு கொண்டு வரலாம் என நினைத்து பணியாற்றியதாகவும், எந்த பதவியையும் குறைத்துப் பார்த்ததில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், துன்பத்தோடு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்கு, அவர்களது பிரச்சினையை சரி செய்த பின்பு அவர்களது முகத்தில் புன்னகை கிடைக்க உதவுவதுதான் நமக்கு கிடைத்த பெருமை. இன்று தான் நான் காக்கி உடை அணியும் கடைசி நாள் என்பதால் கண் கலங்குவதாகவும், அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் மீண்டும் காவல் உடையை அணியவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் ஏ.கே.விஸ்வநாதன் சக காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பிரிவு உபச்சார விழாவில் அணிவகுப்பு நடத்திய காவலர்களுடன் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதையும் படிங்க:மிகவும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடக்கும் மக்கள்.. திருவொற்றியூர் ரயில்வே சுரங்கப்பாதைக்கான தீர்வு எப்போது?

ABOUT THE AUTHOR

...view details