சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், " சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை தொடரும் என்றும் சில பகுதிகளில் அதி கன மழை பெய்யக்கூடும் என்பதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்றைய அறிவிப்பில் சென்னைக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் தொடர்ந்து இடைவிமால் மழை பெய்து வருவதன் காரணமாக அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை முதலே சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது. வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக வலுவடைந்துள்ளதோடு இது மேலும் வலுப்பெறும் என்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை பேசின் மேம்பாலத்திலிருந்து காந்தி கால்வாய்,ஒட்டேரி நல்லா கால்வாய் சேரும் இடமான பங்கிங்ஹாம் கால்வாயில் மழை நீர் தங்கு தடையின்றி செல்கிறதா என்பதை முதல்வர் ஆய்வு செய்தார். இதையடுத்து யானை கவுனி கால்வாயில் மழை நீர் தங்குதடையின்றி சென்றிட மழைநீரில் அடித்துவரப்படும் கழிவுகளை jcb இயந்திரம் மூலம் உடனுக்குடன் அகற்றும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பங்கிங்ஹாம் கால்வாயில் முதல்வர் ஆய்வு (ETV Bharat) இதன் பின்னர் புளியந்தோப்பு பகுதிகளில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு பணி மேற்கொண்டிருந்த பெருநகர சென்னை மாநகராட்சி முன்களப்பணியாளர்களுடன் கலந்துரையாடி அருகில் இருந்த தேநீர் கடைக்கு அவர்களை அழைத்து சென்று முதல்வர் தேநீர் அருந்தி அனைவரையும் ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தினார். "கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் - நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்" என தமது ட்விட்டர் பதிவில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்ட முதல்வர் அதிகாரிகளுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
யானைக் கவுனி பகுதியில் முதலமைச்சர் ஆய்வு (ETV Bharat) இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என் நேரு ,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,சென்னை மாநகராட்சி மேயர் பிரியா,நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி,சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன்,நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இவருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், மா.சுப்பிரமணியன் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேஷ் லக்கானி மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயலாளர் அமுதா மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் இருந்தனர்.
இதையும் படிங்க:மழை எச்சரிக்கைகள்: மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கைகள் என்ன சொல்லுகிறது?
அப்போது மாநில அவசரகால செயல்பாடு மையத்தில் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து துணை முதலமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்," சென்னையில் 24 மணி நேரத்தில் 46.48 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.1 சென்டிமீட்டர் மழையும் தேனாம்பேட்டையில் 6.1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது" என வானிலை ஆய்வு மையம் தகவல் தந்துள்ளதாக குறிப்பிட்டார்.
மழை வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கையாக 1000 நபர்கள் தங்கும் வகையில் 300 எண்ணிக்கையிலான நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் தஞ்சமடைந்தால் உதவுவதற்காக 35 சமையல் அறை மையங்கள் தயார்நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 20 சுருரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லை. கணேசபுரம், பெரம்பூர் சுரங்கப்பாதைகள் மழைநீர் தேக்கம் காரணமாக மூடப்பட்டுள்ளது. அங்கும் தேங்கி உள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டார். எனினும் தொடர் மழை காரணமாக மேலும் சில பாலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதாக மாநகராட்சி பின்னர் அறிவித்தது.
300க்கும் மேற்பட்ட தண்ணீர் தேங்கிய இடங்களில் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது என கூறிய துணை முதலமைச்சர், 24 மணி நேரத்தில் சென்னை முழுவதும் எங்கேயும் மின்தடை என்பதே இல்லை எனவும், கடந்த 12 மணி நேரத்தில் 1500 அழைப்புகள் சென்னை மாநகராட்சியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்துள்ளது. இதில் 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சென்னையில் நிவாரண பணிகளுக்காக 89 படகுகள், பிற மாவட்டங்களில் 130 படகுகள் பணியில் உள்ளதாகக் கூறினார். 931 மையங்கள் நிவாரண பணிக்காக தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் மழை வெள்ள பாதிப்பு கண்காணிக்க நோடல் ஆபீஸர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், 100 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். சென்னையில் 13,000 தன்னார்வலர்கள் சுகாதார பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் இந்த எண்ணிக்கை 65,000 ஆக உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தேவைப்படும் போது அவர்கள் சென்னை அழைத்து வரப்படுவார்கள்" என குறிப்பிட்டார்.