தஞ்சாவூர்:கும்பகோணம் அருகேயுள்ள, திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான சிவசூரிய பெருமான் திருக்கோயில், நவக்கிரக ஸ்தலங்களில் சூரியனுக்குரிய பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இதன் காரமாக இக்கோயில் சூரியனார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும், இக்கோயிலில் மூலவர் சிவசூரிய பெருமான் தனது இரு மனைவியரான சாயாதேவி, உஷா தேவியுடன் அருள்பாலிக்கிறார் மற்றும் அவருக்கு நேர் எதிரில் குருபகவான் காட்சியளிக்கிறார். இதுமட்டும் அல்லாது கூடுதல் சிறப்பாக, ஏனைய கிரகங்கள் அனைத்தும் தனித்தனியாக, வான் மண்டலத்தில் எந்த கிரகம் எந்த திசை நோக்கி இருக்கிறதோ அதே போல இங்கு பிரகாரத்தில் சூரியன், குருவை தவிர்த்த ஏனைய 7 கிரகங்களும் எந்த வித வாகனமோ, ஆயுதமோ இன்றி அருள்பாலிக்கின்றனர்.
இத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலில், தற்போது ரூ.5 கோடி மதிப்பீட்டில் கும்பாபிஷேக திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (செப்.08) கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்கமான பாலாஸ்தாபன விழா, திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், சிறப்பு யாகம், விசேஷ பூஜைகளுடன் நடைபெற்றது.
தொடர்ந்து மூலஸ்தானத்தில் குருமகா சன்னிதானம் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்த சூரியன் மற்றும் குருபகவானை வழிபட்ட பிறகு, ஏழு கிரகங்கள் மற்றும் சண்டிகேசுவரர் மாற்றி அமைக்கப்பட்டுள்ள பிரகார பிரதான மண்டபத்தில் வைத்து கடங்களில் உள்ள புனிதநீரை கொண்டு அபிஷேகம் செய்விக்கப்பட்டு, அலங்காரம் செய்து மகா தீபாராதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.