மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட எழுமகளூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயக் கூலி தொழிலாளி சத்தியசீலன். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி பெரம்பூர் பாலம் அருகில் நின்றிருந்த போது, சந்தேகத்தின் பேரில் அப்போதைய மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன், தலைமை காவலர் உத்திராபதி ஆகியோர் சத்தியசீலனை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் சத்தியசீலன் காணாமல் போனதால், அவரது மனைவி வனிதா பெரம்பூர் மற்றும் பாலையூர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னரும் சத்தியசீலன் கண்டறியப்படாத நிலையில், அவரை கண்டுபிடித்து தரக் கோரி வனிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் 27.04.2008-இல் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளது.
ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் சத்தியசீலன் கண்டுபிடிக்கப்படாததால், இந்த வழக்கு 2013-ல் மத்திய குற்ற புலனாய்வு துறைக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது. ஆனால் சிபிஐ சத்தியசீலனை கண்டுபிடிக்க முடியவில்லை என அறிக்கை தாக்கல் செய்ததன் அடிப்படையில், இவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. சத்தியசீலன் காணாமல் போன நாள்முதல் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்த வனிதா, கடந்த ஜூன் மாதம் 3-ஆம் தேதி கிள்ளியூர் கிராமத்துக்கு விவசாயக் கூலி வேலைக்கு சென்றபோது பாம்பு கடித்து உயிரிழந்தார்.