சென்னை:சர்.பிட்டி.தியாகராயரின் 173வது பிறந்தநாளையொட்டி, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்ட படத்திற்கு, அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, “சமுதாயத்தில் மிக பின்தங்கியவர்கள் வாழ்வியல் மேம்பாடு அடைய வேண்டும் என்றும், சமூகம், கல்வி, பொருளாதாரம் ஆகிய மூன்று பகுதிகளில் மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக நீதிக் கட்சி தொடங்கப்பட்டது. ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்காக குரல் கொடுத்தவர் சர்.பிட்டி தியாகராயர்.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்படி, சென்னையில் கிட்டத்தட்ட ரூ.500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், சாலைகள் அமைப்பதற்கு முறையான ஆய்வுகள் நடத்தப்படாமல், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு பேராசிரியரிடம் சான்றிதழ் பெற்றுக் கொண்டு, ரூ.500 கோடி மதிப்பிற்கு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது.
தற்போது நடப்பது ஒரு இடியமின் சர்வாதிகார ஆட்சி. அதிமுக தொண்டர்கள் இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகள் பற்றி கருத்து கூறினால், இரவோடு இரவாக அவர்களை கைது செய்து விடுகின்றனர். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் சட்டக் கல்லூரியில் நான்காம் வருடம் படிக்கும் மாணவரைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். கருத்து சுதந்திரம் இந்த ஆட்சியில் இல்லை என்பது மிக கண்டிக்கத்தக்கது.
2015ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு நடைபெற்ற இயற்கை பேரிடர்களான வர்தா புயல், சென்னையைத் தாக்கிய மிக்ஜாம் புயல் என பல்வேறு புயல்கள் சென்னையைத் தாக்கியிருக்கும் நிலையில், நாம் மத்திய அரசிடம் கேட்டது ஒன்றரை லட்சம் கோடி. ஆனால், யானை பசிக்கு சோளப்பொறி போல, இதுவரையில் 7 ஆயிரம் கோடி தான் மத்திய அரசு கொடுத்துள்ளது. மத்தியில் ஆளுகின்ற தேசிய கட்சிகள், குறிப்பாக காங்கிரசாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் இது தான் நிலை.