சென்னை:தமிழகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை சட்டவிரோதமாக இணைய அடிமைகளாக (Cyber Slavery) கம்போடியா நாட்டுக்கு அனுப்ப முயன்ற முகவரை குடியேற்ற பாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை, சிபிசிஐடி ஆகியோர் இணைந்து கைதுச் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, மத்திய பத்திரிக்கை தொடர்பு அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, "சட்டவிரோதமாக இணைய அடிமைகளாக தமிழகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கம்போடியா நாட்டுக்கு அனுப்ப முயற்சி செய்த சட்டவிரோத முகவர் திருச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்போடியாவில் நல்ல ஊதியத்துடன் வேலை வாங்கித் தருவதாக போலி வாக்குறுதி அளித்து இளைஞர்களை நம்ப வைத்துள்ளனர். மேலும் இதற்காக பெரும் தொகையை அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளனர். சட்டபூர்வ குடியேற்ற நடைமுறைகளை தவிர்த்து சட்டவிரோத வழியில் இளைஞர்களை சுற்றுலா விசாவில் பயணிக்க அவர் தூண்டியுள்ளார்.
மூன்று தமிழக இளைஞர்கள்
அந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் முகவரின் மோசடியான அறிவுரைகளின் தன்மையை அறிந்துகொண்டு, தானாக முன்வந்து வெளிநாடு செல்லும் தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டார். மற்ற இரண்டு இளைஞர்களும் வெளிநாடு செல்வதற்காக விமானத்தில் அமர்வதற்கு முன்பு கொச்சி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தாங்கள் பணியமர்த்தப்படும் வேலையின் உண்மைத் தன்மையை அறிந்ததும், அந்த இரு இளைஞர்களும் வெளிநாடு செல்லும் எண்ணத்தைக் கைவிட முடிவு செய்தனர்,” என குறிப்பிட்டிருந்தது.
இது குறித்து, உளவுப் பிரிவினர் அளித்த தகவலின் அடிப்படையில், "குடியேற்ற பாதுகாவலர், சென்னை காவல்துறை, சிபிசிஐடி ஆகியோர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக திருச்சியில் அந்த சட்டவிரோத முகவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள், இதன் பின்னணியில் உள்ளவர்கள் போன்ற அனைத்து தகவல்களையும் அறிவதற்கு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என கூறப்பட்டிருந்தது.