கடலூர்: கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மேயர் சுந்தரி ராஜா இன்று (செப்.24) ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது வகுப்பறைகளுக்கு சென்று பார்வையிட்ட அவர், வகுப்பறைகள் சுத்தம் செய்யாமல் குப்பையும், மண்ணுமாய் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து, பள்ளி ஏன் சுத்தம் செய்யவில்லை? என்று மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலக அதிகாரிகளை அழைத்து பள்ளியை தூய்மைப் படுத்த உத்தரவிட்டார். மேலும், அவர் ஏன் வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்படாமல் இருக்கிறது என பள்ளி தலைமை ஆசிரியரையும் கடிந்துக் கொண்டார்.
தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் வருவதற்கு தாமதமானதால் வகுப்பறையை நானே சுத்தம் செய்து ிட்டு செல்கிறேன் என்று கூறி மேயர் சுந்தரி ராஜா வகுப்பறைக்குள் சென்று துடைப்பம் கொண்டு வகுப்பறை முழுவதும் சுத்தம் செய்தார். அத்துடன், மாநகராட்சி பள்ளி தூய்மையாக வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், வகுப்பறைகளை தாங்களே சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இதனால் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வகுப்பறையை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்த கடலூர் மேய (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:கால்நூற்றாண்டு துயர வாழ்க்கைக்கு தீர்வு.. காலியாகிறது கண்ணப்பர் திடல்!
தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய மேயர் சுந்தரி ராஜா, “ பள்ளிக்கு புதியதாக கூடைப்பந்து விளையாட்டு திடல் அமைத்து தர கோரிக்கை வைத்திருந்தார்கள். தற்போது, இது குறித்து மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாதத்திற்குள் கூடைப்பந்து விளையாட்டு திடல் அமைப்பதற்கான பணி துவங்கும். மாணவர்கள் நன்றாக படித்து மாநகராட்சி பள்ளிக்கு நற்பெயரை பெற்றுத் தர வேண்டும். 100 சதவீத விழுக்காடு பெறுவதற்காக மாணவர்களும், ஆசிரியர்களும் உழைத்திட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, கடந்த மாதம் மாநகராட்சி பள்ளியை மேயர் சுந்தரி ராஜா ஆய்வு செய்தபோது மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே காலணிகளை கழட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனை பார்த்த மேயர் மாணவர்களுக்கு ஏன் இந்த பாகுபாடு என அனைவரையும் காலனி அணிந்து கொண்டு வகுப்பிற்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதற்கு ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் காலனி அணிந்து வந்தால் குப்பைகள் சேரும். சைனஸ் பிரச்சனை ஏற்படும் என்றனர். அதற்காக மாநகராட்சி மேயர் அனைத்து வகுப்பறைகளுக்கும் மேட் (மிதியடி) வழங்கியது குறிப்பிடத்தகக்கது.