கரூர்: கரூர் மாவட்டம், மேட்டுமகாதானபுரம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் திருக்கோயில். இங்கு, ஒவ்வொரு ஆண்டும் ஆடி பெருக்கு அன்று அம்மனுக்கு திருவிழா எடுப்பதும் வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் ஆடிப்பெருக்கு திருவிழா நேற்று ஆகஸ்ட் 3ம் தேதி துவங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த வகையில், கோயில் பூசாரி பெரியசாமி நேர்த்திக்கடன் செலுத்தும் ஒவ்வொரு பக்தர்கள் தலையிலும் தேங்காய் உடைத்தார். சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நேர்த்திக்கடன் செலுத்தும் பொழுது ஒரு சிலருக்கு மட்டும் தலையில் சிறு ரத்த கசிவு ஏற்பட்டது. அதனைப் பார்த்த மருத்துவக் குழுவினர் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.